இன்றைக்கு ஒரு கடையில் சுமார் 20 நிமிடம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை. என்னருகில் 3 இளைஞர்கள். மூவரும் செல்ஃபோன்களை நோண்டிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று ஒருவர், ‘டேய், 2 மணிநேரம்தாண்டா இருக்கு’ என்றார், ‘இன்னும் 8 லட்சம் வ்யூஸ் வேணும்டா’ என்றார்.
‘8 லட்சம்தானே? வந்துடும்டா’ என்றார் இரண்டாவது இளைஞர்.
‘எனக்குக் கவலையா இருக்குடா’ என்றார் முதல் நபர், ‘ஒருவேளை வரலைன்னா?’
நான் அவர்களைக் குறுகுறுப்புடன் ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை. பின்னர் அவர்கள் பரபரவென்று தொலைபேசியைத் திறந்து ஒரு வீடியோவை ஓடவிட்டபோதுதான் விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.
அதாவது, இவர்கள் இருவரும் நடிகர் விஜயின் விசிறிகள். நேற்றைக்கு அவருடைய புதிய திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. அடுத்த 2 மணிநேரத்துக்குள் இன்னும் 8 லட்சம் பேர் அதைப் பார்த்தால் ஏதோ புள்ளிவிவரச் சாதனை நிகழும்போல. அதை எண்ணிதான் இவர்கள் பதறுகிறார்கள்.
அடுத்த சில நிமிடங்களுக்கு அந்த இளைஞர்கள் இருவரும் தங்களுடைய ஃபோன்களில் அடுத்தடுத்து அந்த ட்ரெய்லரை ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் என்ன வருகிறது என்பதையெல்லாம் அவர்கள் கவனிக்கவில்லை, எண்ணிக்கைக் கணக்கு முக்கியம், அவ்வளவுதான்.
பின்னர், அவர்களுடைய கவனம் அந்த மூன்றாவது இளைஞரிடம் திரும்பியது, ‘டேய், நீயும் தளபதி வீடியோவைப் பாருடா’ என்றார் ஒருவர்.
‘இன்னும் எட்டு லட்சம் வ்யூஸ் வேணும், நான் ஒருத்தன் பார்த்து என்னடா ஆகப்போகுது?’ என்றார் அந்த மூன்றாவது இளைஞர்.
‘அப்படி இல்லை மச்சி’ என்றார் முதல் இளைஞர், ‘இந்தமாதிரி உலகம்முழுக்கத் தளபதி ஃபேன்ஸ் எட்டு லட்சம் பேரு அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் ஒருத்தர்கிட்ட சொன்னாப் போதும்… கண்டிப்பாச் சொல்லிக்கிட்டிருப்பாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு.’
சொன்னால் சிரிப்பீர்கள், அந்த இளைஞர் நம்பிக்கையோடும் மிகுந்த விசுவாசத்தோடும் பேசிய விதத்தில் எனக்குக்கூட உடனடியாக அந்த டிரெய்லரைப் பார்க்கவேண்டும்போலிருந்தது.
இளைஞர்களுக்கு இப்படி ஏதோ ஒன்றின்மீது பெரிய பற்றும் நம்பிக்கையும் இருப்பது பிடித்துக்கொண்டு முன்னேறுவதற்கு நல்லதுதான். எனக்கு இளவயதில் கமலஹாசனும் இளையராஜாவும் சுஜாதாவும் அப்படி உதவினார்கள்.