நாம் பிறரைத் தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறோமோ என்கிற ஒரு சிறு கேள்வி நமக்குள் எழுவது நம்மைச் செழுமையாக்கும்.
எப்படி?
ஓர் எடுத்துக்காட்டின்மூலம் விளக்குகிறேன்.
என்னுடைய அலுவலகப் பணி தொடர்பாக நான் நாள்தோறும் பலரைத் தொடர்புகொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொருவரிடமும் ‘இதைச் செய்தீர்களா?’, ‘அதைச் செய்தீர்களா?’, ‘இந்த வேலை எப்போது நிறைவடையும்?’, ‘அது ஏன் இன்னும் நிறைவடையவில்லை?’ என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்கவேண்டியிருக்கும். அவர்கள் அதற்குப் பதில் சொல்வதற்குச் சில மணிநேரங்கள் அல்லது ஓரிரு நாட்கள் ஆகும், அதன்பிறகுதான் வேலை நின்ற இடத்திலிருந்து நகரும்.
இந்த நடைமுறையில் நான் ஒரு சிறு மாற்றத்தைச் செய்கிறேன். Xyz என்ற நபரைத் தொடர்புகொண்டு நான் கேட்க விரும்பும் கேள்வியை மின்னஞ்சலில் அல்லது அலுவலக அரட்டைப் பெட்டியில் தட்டச்சு செய்துவிடுவேன். ஆனால், அதை அனுப்புவதற்குமுன்னால் ‘இந்த நபர் இப்போது என்ன சூழ்நிலையில் இருக்கிறாரோ, இவரைத் தொந்தரவு செய்யாமல், இதைப்பற்றி இவரிடம் கேட்காமல் நானாக ஏதாவது செய்து இந்தத் தகவலைப் பெற இயலுமா?’ என்று ஒரு நிமிடம் யோசிப்பேன். சுமார் 40% அல்லது 50% நேரங்களில் வேறு ஒரு வழி தோன்றிவிடும். அந்த வழியைப் பின்பற்றி வேலையைச் செய்துவிடுவேன்.

எடுத்துக்காட்டாக, பல நேரங்களில் நான் கேட்கும் தகவல் ஓர் ஆவணத்திலோ, இணையப் பக்கத்திலோ கிடைக்கும். அந்த இடத்துக்குச் சென்று யார் வேண்டுமானாலும் அந்தத் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். இது அவருடைய பொறுப்புதான். ஆனால், இதை அவர்தான் செய்யவேண்டும் என்று கட்டாயமில்லை. எந்தத் தகவல் எங்கு கிடைக்கலாம் என்று தெரிந்துவைத்திருந்தால் நானும் இதைச் செய்யலாம்.
இதனால் எனக்குச் சிறிது கூடுதல் வேலைதான். ஆனால், இதில் சில நன்மைகள் உண்டு:
- நான் என் வேலைக்கு இன்னொருவரைச் சார்ந்திருப்பது குறைகிறது. ஒருவேளை அவர் மிகுந்த வேலைப்பளுவில் இருக்கலாம், விடுமுறையில் இருக்கலாம், அதனால் என் வேலை தடைப்படக்கூடும். இந்தச் சார்ந்திருத்தலை (Dependency) எவ்வளவு குறைக்கிறேனோ அவ்வளவு எனக்கு நல்லது.
- மேற்கண்ட வடிகட்டலால் நான் பிறரைத் தொடர்புகொண்டு ஒரு தகவலைக் கேட்கிற சூழ்நிலைகள் குறைவதால் அவர்கள் எனக்கு விரைவாகப் பதிலளிக்கும் வாய்ப்பு கூடுகிறது. 5 கேள்வி கேட்கிற இடத்தில் 3 கேள்வி கேட்டால் பதில் விரைவாகவும் விருப்பத்துடனும் வரும். அத்துடன், எனக்கும் ஐந்துக்கு இரண்டு விஷயங்களைக் கூடுதலாகத் தெரிந்துகொள்கிற வாய்ப்பு அமையும், என்னுடைய உள் அறிவுத்தளம் (Internal Knowledgebase) வளரும்.
- நான் தேவையுள்ள கேள்விகளைத்தான் கேட்பேன், மற்றவற்றை நானாக முயன்று செய்துவிடுவேன் என்கிற பிம்பம் பிறர் மனத்தில் தோன்றும். அது எங்கள் பணி உறவுக்கு நல்லது.
அதே நேரம், இதில் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும்:
- பல நேரங்களில் ஆவணங்கள் சொல்வதைவிட மனிதர்கள் சொல்வது கூடுதல் துல்லியத்துடன் இருக்கும். நாம் வேண்டும் தகவல் மிகச் சரியாக இருந்தாகவேண்டும் என்கிற கட்டாயம் உள்ள சூழ்நிலைகளில் அவர்களைத் தொடர்புகொண்டு பேசுவதுதான் நல்லது.
- எது நம் வேலை, எது அவர்களுடைய வேலை என்கிற வரம்பு முக்கியம். அதைத் தாண்டிவிட்டால் மற்றவர்கள் வேலையை நாம் செய்யத் தொடங்கிவிடுவோம். நம் வேலை நம்முடையது, அவர்கள் வேலை அவர்களுடையது, இரண்டுக்கும் நடுவில் இருக்கும் எல்லையில்மட்டும் நாம் கொஞ்சம் நெகிழ்வோடு விளையாடலாம்.