வீட்டில் ஒரு விளக்கு (ட்யூப்லைட்) செயலிழந்துவிட்டது. அதை மாற்றுவதற்காக மின்பொருள் கடைக்குச் சென்றிருந்தோம்.
ட்யூப்லைட்களில் வெவ்வேறு நீளம், தடிமனெல்லாம் உண்டல்லவா? ஆகவே, குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும் சரியான மாற்று விளக்கை வாங்கவேண்டும் என்பதற்காகவும் பழைய விளக்கையும் கையிலேயே கொண்டுசென்றோம்.
கடைக்காரர் எங்களுடைய பழைய விளக்கை வாங்கிப் பார்த்தார். ஆனால், அதற்கேற்ற புதிய விளக்கை எடுத்துக் கொடுக்கவில்லை. தன்னுடைய கடையில் எரிந்துகொண்டிருந்த விளக்கைப் பிடுங்கிவிட்டு இந்த விளக்கை அங்கு பொருத்தினார். அது பிரமாதமாக எரிந்தது. ‘லைட் நல்லாதான் இருக்கு, ஸ்டார்ட்டர் போயிருக்கும்’ என்றார் புன்னகையுடன். ‘புது லைட்டெல்லாம் வேணாம், பத்து ரூபாய்க்கு ஒரு ஸ்டார்ட்டர் வாங்கிப்போடுங்க, சரியாகிடும்!’
நாங்கள் அங்கு நின்றுகொண்டிருந்த நேரத்திலேயே இன்னொருவர் ஓர் அலங்கார விளக்குடன் வந்தார். ‘இது எரியமாட்டேங்குது’ என்றார். அதையும் அந்தக் கடைக்காரர் சட்டென்று மாற்றித்தந்துவிடவில்லை. கவனமாகப் பரிசோதித்துப்பார்த்தார், அதிலிருக்கிற பிரச்னையைச் சரிசெய்துகொடுத்தார். ‘ஒயர் மாத்தினாப் போதும்ங்க, புதுசு வாங்கவேணாம்’ என்றார்.
உண்மையில், மின்பொருள்களை விற்கிற கடை வைத்திருக்கிற ஒருவர் இதையெல்லாம் செய்யவேண்டும் என்கிற தேவையோ கட்டாயமோ இல்லை. எங்களுடைய பிரச்னையைச் சரிசெய்துகொடுத்ததற்காக நாங்கள் அவருக்குக் கூலி கொடுக்கவும் இல்லை. சொல்லப்போனால், இதன்மூலம் அவருக்குச் சுமார் நூறு ரூபாய் வருமான இழப்புதான்.
அதே நேரம், இந்தச் சிறு செயலின்மூலம் அவர் எங்கள் மனத்தில் ஒரு நம்பகமான தொழில்முறை நண்பராக, கூட்டாளியாக ஆகிறார். நாங்கள் அவருடைய நிரந்தர வாடிக்கையாளர்களாகிறோம். தொலைநோக்கில் பார்க்கும்போது, இப்போதைய விற்பனையைவிட இதுதான் அவருக்கு லாபம்.
சொல்லப்போனால், இதில் லாபக்கணக்கைப் பார்ப்பதுகூட என்னுடைய சிறுமையைத்தான் காட்டுகிறது. வாடிக்கையாளர்களுடைய பிரச்னைகளை ஆராய்ந்து, சரிசெய்துதருவதே அவருக்கு மகிழ்ச்சி தருகிற செயலாக இருக்கலாம், விற்பனை லாபத்தைவிட அதை அவர் பெரிதாகக் கருதலாம்!
அவருடைய நோக்கம் என்னவோ, நமக்குத் தெரியாது. ‘எது செயலிழந்தாலும் வீசி எறிந்துவிட்டுப் புதிது வாங்கிக்கொள்’ என்று வலியுறுத்துகிற நுகர்வோர் உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களும் உள்ளார்கள் என்பதே மகிழ்ச்சிதான். Neighborhood Stores எனப்படும் சின்னஞ்சிறிய உள்ளுர்க்கடைகள் பெரிய இணையக்கடைகளைக்கூட வெல்வது இந்தப் புள்ளியில்தான்!
பின்குறிப்பு: ட்யூப்லைட்டைத் தமிழில் ‘குழல் விளக்கு’ என்றோ ‘குழாய் விளக்கு’ என்றோ நேரடியாக மொழிபெயர்க்கிறோம். ஆனால், திருநெல்வேலி ஆவுடையப்பர் என்பவர் இதற்கு ‘வாழைத்தண்டு விளக்கு’ என்று பெயர் வைத்திருந்தாராம். என்ன அழகான சொல்!
அருமையான பதிவு, இக்காலத்தில் இந்த மாதிரி கடைக்காரர்களை காண்பது அபூர்வமாகி விட்டது. என்ன செய்து வேண்டுமானாலும் (ஏமாற்றியும்) சம்பாதிப்பது தான் இலட்சியம் என்று இருப்பவர்கள் மத்தியில், வாடிக்கையாளர்களின் பிரச்சனைக்கு தன்னால் முடிந்த எளிய தீர்வை கொடுப்பதில் மகிழ்ச்சி என்று வாழ்பவர்களை பார்க்கும் பொது வாழ்க்கையில் நம்பிக்கை ஒரு துளிர் விடுகிறது… இத்தகையவர்களை பற்றிய பதிவுகள் நம்மை விட நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.
கல்யாண வீடுகளில் வாழை மரம் வாசலில் வைத்திருப்பார்கள், அலங்காரத்திற்கு குழல் விளக்குகளை வாழை மரங்களோடு கட்டிப் போட்டு எரிய விட்டிருப்பார்கள், அதனால் அப்பேர் (வாழைத்தண்டு விளக்கு) காரணமோ? –
உருவம்தான் காரணம். வாழைத்தண்டைப்போல்தானே இருக்கிறது அந்த விளக்கு 🙂
Good. My neighbor hardware shop owner did similar thing for me. Instead of changing washing machine tube, he advised me to change only the part of that cost me only 50 rupees. Changing entire tube might have cost 300 rupees.
Neighborhood Stores எனப்படும் சின்னஞ்சிறிய உள்ளுர்க்கடைகள் பெரிய இணையக்கடைகளைக்கூட வெல்வது இந்தப் புள்ளியில்தான்! – absolutely