நாலடியாரில் “தாழ்வின்றி தன்னைச் செயின்” என்று ஓர் அழகான வரி வருகிறது. இதைச் சற்று மாற்றினால் ஒரு தனிப்பட்ட முழக்கத்தைப்போல், Personal Mission Statementபோல், நம்மை எப்போதும் வழிநடத்துகிற கொள்கையைப்போல் ஆகிவிடும்:
தாழ்வின்றி தன்னைச் செய்!
இந்த வரியின் பின்னணியைத் தெரிந்துகொண்டால் இதை இன்னும் நன்றாக ரசிக்கலாம்.
காட்டில் இருக்கிற சிறு மரம். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது, வலிமை பெறுகிறது, பெரிய யானையைக் கட்டி நிறுத்துகிற கட்டுத்தறியாக மாறுகிறது.

அதுபோல, ஒருவன் தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு எந்தத் தாழ்ச்சியும் இல்லாமல் ஆற்றலை, திறமைகளை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டிருந்தான் என்றால், அவன் எப்போதும் பெருமையுடன் வாழ்வான். அதுதான் தாழ்வின்றி தன்னைச் செயல்!