கலைஞன் என்பதால் அவனுடைய குற்றங்களை மன்னித்துவிடவேண்டும், கலையைப் பிரித்துப் பார்த்துக் கலைஞனைமட்டும் தண்டிக்கவேண்டும், கலையையும் கலைஞனையும் தூரத்தள்ளிவிடவேண்டும் என்கிற மூன்று நிலை விவாதங்களும் நல்லவை. ஆனால், இதுபோன்ற குரல்கள் எழும்போதெல்லாம் நம்முடைய பார்வை குற்றம் சாட்டியவர்/பாதிப்புக்கு ஆளானவர்மீதுதான் அழுத்தமாக விழவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களில் நீங்களும் நானும்கூட (நேற்றைக்கோ, இன்றைக்கோ, நாளைக்கோ) இருக்கலாம். அதனால், அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வெளியை உண்டாக்க என்ன வழி என்பதில் கவனம் இருந்தால்தான் இதுபோன்ற திரைமறைவுக் குற்றங்களைக் கொஞ்சமாவது குறைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, சாலை விபத்துகள் மிகுதியாகின்றன என்றால், வண்டியை ஓட்டியவன் எவன் என்று கண்கள் சிவந்து பயன் இல்லை. அதுவும் முக்கியம்தான், ஆனால் அதுமட்டும் முக்கியம் இல்லை. ஓட்டுநர் உரிமக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவது, வண்டிகளில் இருக்கைப் பட்டை போன்ற பாதுகாப்பு வசதிகளைப் பெருக்குவது, அவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்தும்படி செய்வது, சாலையை வசதியாக்குவது, அங்கும் வேகத்தடை போன்ற பாதுகாப்பு வசதிகளைச் சேர்ப்பது என ஆயிரம் விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றை மீறியும் விபத்துகள் நடக்கலாம். ஆனால், அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அவ்வளவுதான் விஷயம்.
இதையெல்லாம் தாண்டி, சாலையில் சும்மா நடந்துகொண்டிருப்பவர்கள்மீது எதுவும் வந்து மோதாதபடி, அப்படி மோதினால் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி (அல்லது முழு உதவி) கிடைக்கும்படி என்ன செய்வது என யோசிக்கவேண்டும். ஏனெனில், அந்தச் சூழலில் அவர்கள்தான் மிக எளியவர்கள், மிகவும் வலிமையற்றவர்கள், மிகவும் குரலற்றவர்கள், மிகவும் வலியை அனுபவிக்கிறவர்கள்.