எங்கள் வீட்டருகில் ஒரு நெடுஞ்சாலை. பெங்களூரையும் கூப்பிடுதொலைவிலுள்ள தமிழ் நாட்டையும் இணைக்கும் முதன்மைச் சாலை என்பதால் பகல், இரவு எந்நேரமும் போக்குவரத்து நிறைந்து வழிகிற சாலை.
அந்தச் சாலையில் ஒரு மரக்கடை. அதனருகில் மரங்களை அறுத்து, இழைக்கிற ஆலை. இவற்றுக்கு வெளியில் ஒரு வண்டி நின்றிருந்தது. அதில் சுமார் முப்பது மூட்டைகள் சில அடுக்குகளாக ஏற்றப்பட்டிருந்தன.
நான் அந்தக் கடையை நெருங்கிய நேரம், அந்த மூட்டைகளின்மீது இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். கீழிருந்து அவரிடம் இன்னொரு மூட்டை தரப்பட்டது. அதை வாங்கி, ஏற்கெனவே இருக்கிற மூட்டைகளின்மீது வைத்தார். அந்தப் புதிய மூட்டைமீது ஏறித் தையத்தக்கா என்று குதிக்கத் தொடங்கினார்.
இதையெல்லாம் பார்த்தபடி நடந்துவந்த நான் திகைத்துப்போனேன், மூட்டையின்மீது இவர் ஏன் குதிக்கிறார் என்று அவரைக் குறுகுறுப்புடன் பார்த்தேன்.
அந்த வண்டி மர வேலைக் கடைகளின் வாசலில் நின்றிருந்ததால், அதில் ஏற்றப்பட்டிருந்தவை மரத்தூள் மூட்டைகள் என்று நினைக்கிறேன். அந்த மூட்டைகள் ஒழுங்கான அமைப்பில் இல்லை, அதாவது, தட்டையாகச் சீரான தடிமனுடன் இல்லை. மூட்டைகளின் இருபுறமும் அங்கும் இங்கும் ஏறி இறங்கிக் காணப்பட்டன. அப்படிப்பட்ட மூட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குவது கடினம்.
அதனால், இந்த இளைஞர் ஒவ்வொரு மூட்டையையும் வண்டிமேல் ஏற்றிவிட்டு அதன்மீது குதிக்கிறார். அத்துடன் நிறுத்தவில்லை, நல்ல தாள ஒழுங்குடன் சிறு நடனம் ஆடுகிறார். அத்தனைப் பரபரப்பான சாலையில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவர் ஆடிக்கொண்டிருப்பது அவ்வளவு அழகாக இருந்தது.
ஆனால், அந்த நடனம் சில விநாடிகள்தான், அதற்குள் மூட்டை தட்டையாகி ஒழுங்காகிவிட்டது. இப்போது அதன்மீது இன்னொரு மூட்டையை எளிதில் வைத்துவிடலாம்.
வண்டியில் மூட்டைகளை ஏற்றி, அடுக்குகிற மிகக் கடினமான வேலைக்கு நடுவில் அவருக்கு இப்படிச் சில மகிழ்ச்சிக் கணங்கள் கிடைத்திருக்கின்றன, அல்லது, அவற்றை அவரே உருவாக்கிக்கொண்டிருக்கிறார். மரத்தூள் மூட்டைக் காளிங்கன்மீது நடனமாடும் இந்தக் கண்ணன் உலகுக்கு இன்னும் சற்றுக் கவின் கூட்டிவிட்டார்.