இங்கு Archie Comics அன்பர்கள் உண்டா? ஆம் எனில், கொஞ்சம் உரையாடுவோம், வாங்க.
கல்லூரி நாட்களில், வழக்கம்போல் சாயிபாபா காலனி ராஜா பழைய புத்தகக் கடையில்தான் எனக்கு ஆர்ச்சியும் அவருடைய தோழர்களும் அறிமுகமானார்கள். அதன்பிறகு, மூன்று கட்டங்கள்மட்டும் கொண்ட சிறு துணுக்குகளில் தொடங்கி ஆயிரம் பக்கம் கொண்ட நீளத் தொகுப்புவரை ஏராளமாகப் படித்திருக்கிறேன், இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆர்ச்சி காமிக்ஸின் மிகச் சிறந்த பண்பாக நான் நினைப்பது, எல்லா வகை மனிதர்களுடைய சரியான கலவைதான். எல்லாரும் நல்லவர்கள்தான், எல்லாரிடமும் துளி கெட்டத்தனமும் இருக்கிறது, அது சூழ்நிலையைப் பொறுத்து வெளிப்படுகிறது, ஆனால், ஐந்தாறு பக்கங்களில் எல்லாம் (பெரும்பாலும்) சரியாகிவிடுகிறது. ஏனெனில், கெட்டதை நல்லது மூழ்கடித்துவிடுகிறது.

இந்தக் கதைகளில் வரும் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய தலைமுறை இடைவெளிகள் உள்ளன. ஆனால், மேலோட்டமான கேலி, கிண்டலைத் தாண்டி, அவர்கள் ஒருவர்மீது ஒருவர் மதிப்பைக் காண்பிக்கிறார்கள், மற்றவரை விட்டுக்கொடுப்பதே இல்லை.
ஆர்ச்சியின் வழக்கமான தோழர்களுடன் புதியவர்களும் அவ்வப்போது வருவார்கள். அவர்கள் இவர்களுடன் அறிமுகமாகவும் நட்பாகவும் சில சிறு நிகழ்வுகள் போதுமானதாக இருக்கும். அதன்பிறகு, அந்த நட்பு விரைவில் ஆழமாகிவிடும், இருதரப்பிலும் மாற்றங்களைக் கொண்டுவரும்.
பதின்பருவத்தினர் பணத்துக்குச் சிரமப்படுவதும், அவர்களுக்கிடையில் ஒருத்தி பெரும்பணக்காரியாக இருப்பதும் சுவையான முரண். அதை ஆர்ச்சி கதைகள் நன்கு கையாள்கின்றன. அவ்வப்போது பணச்செழிப்பைக் காட்சிப்படுத்தி மலைப்பூட்டினாலும், பெரும்பாலும் இருப்பதைக் கொண்டு கொண்டாடுவோரைத்தான் முன்னிறுத்துகின்றன.
கொஞ்சம் பெரிய திரையில் இதையெல்லாம் விரித்துப் பார்த்தால் இது ஒரு வாழ்க்கைக் கையேடு. அதனால்தான் எனக்குப் பழக்கமில்லாத காலகட்டத்தில் எனக்கு அறிமுகமில்லாத பண்பாட்டில் வாழ்ந்த இந்த இளைஞர்கள் இன்றுவரை என் நெருங்கிய நண்பர்கள்!