“Two beers and a puppy test” என்ற தேர்வைப்பற்றிப் படித்தேன். நம்முடைய நண்பர்கள்/உறவினர்கள்/தெரிந்தவர்களைப்பற்றி நாம் எப்படி உணர்கிறோம் என்பதை எடைபோடுவதற்கு Ross McCammon என்ற எழுத்தாளர் இந்தத் தேர்வை உருவாக்கியிருக்கிறார்.
கஷ்டமான தேர்வு இல்லை. இரண்டே இரண்டு கேள்விகள்தான்:
1. நான் இந்த நபருடன் அமர்ந்து பீர் குடிப்பேனா?
2. நான் வெளியூர் செல்கிற நேரத்தில் இந்த நபரை நம்பி என்னுடைய நாய்க்குட்டியை இவரிடம் ஒப்படைப்பேனா?

நான் பீர் குடிப்பதில்லை, என் வீட்டில் நாய்க்குட்டி இல்லை என்றெல்லாம் பதில் சொல்லக்கூடாது. இங்கு பீர் என்பது ஒருவருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதன் குறியீடு, நாய்க்குட்டி என்பது நமக்கு மிகவும் முதன்மையான, நாம் மிகவும் விரும்புகிற பொருட்களின் குறியீடு, அவ்வளவுதான்.
70கள், 80களின் கதைகள், படங்களில் வீட்டுச் சாவி மாமியாரிடமிருந்து மருமகளுக்குச் செல்வது ஒரு முதன்மையான நிகழ்வாகக் காண்பிக்கப்படும். அந்தச் சாவியும் ஒரு நாய்க்குட்டிதான்.
ஒருவிதத்தில், இது ஒரு தற்பரிசோதனைத் தேர்வும்கூட. அதாவது, ஒருவர் இந்தக் கேள்விகளைத் தன்னை நோக்கியும் கேட்டுக்கொள்ளலாம்.