நேற்று பெரிய மழையில் சிக்கிக்கொண்டேன். கையில் குடை இருந்தது. ஆனாலும் போதவில்லை. அப்படியொரு மழை.
நல்லவேளையாக, அருகில் ஒதுங்க ஓர் இடம் இருந்தது. ஆனால், அடுத்த 45 நிமிடங்கள் அங்கிருந்து நகரமுடியவில்லை.
ஏன் கால் கடுக்க நிற்கவேண்டும்? சட்டைப்பையில் தொலைபேசி உள்ளது, ஓலாவிலோ ஊபரிலோ ஆட்டோவைக் கூப்பிடலாம், டாக்ஸியைக் கூப்பிடலாம். ஆனால், பெங்களூரில் நான்கு தூறல் போட்டாலே ஆட்டோ, டாக்ஸி வராது என்பதுதான் எதார்த்தம். அதனால், பொறுமையாக நின்றிருந்தேன்.
45 நிமிடங்களுக்குப்பிறகு மழை ஓரளவு நின்றுவிட்டது. ஆனால் சாலையில் பெருவெள்ளமாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. சமாளித்து நெடுஞ்சாலைக்கு வந்து ஆட்டோக்களை நிறுத்தப் பார்த்தால், அனைத்து ஆட்டோக்களிலும் அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள்.
அதனால், அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். அங்கும் இருக்கைகள் நிரம்பியிருந்தன. கால் கெஞ்சக் கெஞ்ச நின்றிருந்தேன்.
மழையால் சாலையில் போக்குவரத்து மெதுவாகிவிட்டது, அதனால், பதினைந்து நிமிடங்களுக்குப்பிறகுதான் ஒரு பேருந்து வந்தது. அதுவும் முழுக்க நிரம்பியிருந்தது, பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.
சரி, பேருந்து நிறுத்தத்தில் நிற்பதற்குப் பதில் பேருந்துக்குள் நின்றால் சிறிது தொலைவாவது குறையும் என்று ஏறிக்கொண்டேன், பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் என்னைச் செருகிக்கொண்டேன்.
பேருந்து மெதுவாக நகர்ந்து நகர்ந்து சாலையில் சென்றது. ஓட்டுநரைக் குறை சொல்வதற்கில்லை. எல்லா நாற்சந்திப்புகளிலும் அப்படியொரு போக்குவரத்து நெரிசல். அவர் என்னதான் செய்வார்?
அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் மேலும் மேல் மக்கள் எங்கள் பேருந்துக்குள் நுழைந்தார்கள். எல்லாரும் என்னைப்போல் காத்திருந்து சலித்தவர்கள்தாம் என்பது முகக்குறிப்பில் தெரிந்தது.
இத்தனைக் கூட்டத்திலும் அந்தப் பேருந்தின் நடத்துநர் மிகத் திறமையாகச் செயல்பட்டார். நெரிசலுக்குள் நுழைந்து தஞ்சமடைந்த எல்லாரையும் சரியாகக் கண்டுபிடித்துப் பயணச்சீட்டு கொடுத்துச் சில்லறையும் கொடுத்துவிட்டார். ஒரு பெண் ‘காசு இல்லைண்ணா, GPay பண்ணட்டுமா?’ என்று கேட்டபோது, ‘எனக்குக் கமிஷன் 10 ரூபாய் எக்ஸ்ட்ரா. பரவாயில்லையா?’ என்று கலாய்க்கக்கூடச் செய்தார்.
என் காலில் விநாடிக்கு விநாடி வலி மிகுந்துகொண்டிருந்தது. எப்படியாவது உட்கார ஓர் இடம் கிடைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று ஏங்கினேன். ஆனால், அது நடக்கவில்லை. சிலர் எழுந்து இறங்கியபோதும், அந்த இடத்துக்குக் கடுமையான போட்டி இருந்தது. பாய்ந்து இடம் பிடிப்பதெல்லாம் எனக்கு எப்போதும் கைவராத கலை.
சுமார் 30 நிமிடங்களுக்குப்பின், ஒரு நிறுத்தத்தில் சட்டென்று பாதிப் பேருந்து இறங்கிவிட்டது. பெரும்பாலான இருக்கைகள் காலி.
ஆனால், அந்தக் கணத்தில் ஏனோ எனக்கு உட்காரத் தோன்றவில்லை. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப்போகிறேன், அரை நிமிடப் பயணத்துக்கு எதற்கு இருக்கை என்பது ஒரு காரணம். அதைவிடப் பெரிய இன்னொரு காரணமும் இருக்கிறது என்று நினைக்கிறேன். வலி மிக மிக ஒரு கட்டத்தில் நாம் அதை விரும்பத் தொடங்கிவிடுகிறோமோ? காலம் கடந்து கிடைக்கிற தீர்வை மறுப்பதன்மூலம் அதைத் தண்டிப்பதாக நினைக்கிற அசட்டுத்தனமோ?