இன்று பேருந்தில் என்னருகில் அமர்ந்திருந்தவர் மிகுந்த எரிச்சலில் இருந்தார், சுற்றிலும் பார்த்து ஏதோ புலம்பியபடி இருந்தார்.
பொதுவாக நான் பேருந்தில் யாரிடமும் பேச்சுக் கொடுக்கமாட்டேன். ‘என்கிட்ட யாராவது பேசினீங்கன்னா கடிச்சுவெச்சுப்புடுவேன்’ என்பதுபோல் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். அதையும் தாண்டிச் சிலர் என்னிடம் பேசுவார்கள். இந்த மனிதர் அந்த வகை.
எங்கள் பேருந்தில் ஏறியிருந்த பெண்களை அவர் சுட்டிக்காட்டி, ‘பாருங்க, ஃப்ரீ பஸ்ன்னதும் கும்பலாக் கிளம்பி வந்துட்டாங்க’ என்றார் எரிச்சலுடன், ‘இதனால நம்ம மாநிலத்துக்கு எவ்ளோ நஷ்டம் தெரியுமா? இவங்கல்லாம் பஸ்ல வரலைன்னு யார் அழுதாங்க?’
அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. இன்றுமுதல் கர்நாடகத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி அறிவித்திருக்கிறார்கள். அது இந்த மனிதருக்குப் பொறுக்கவில்லை, சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்றுகூடப் பார்க்காமல் வன்மத்தைக் கக்குகிறார். இவர் தனியறையில் தன் வீட்டுப் பெண்களை, தனக்குக் கீழ் வேலை பார்க்கிற மகளிரை எப்படி நடத்துவார் என்று யோசியுங்கள்!
‘ஃப்ரீ பஸ்ன்னதும் கும்பலாக் கிளம்பி வந்துட்டாங்க’ என்று சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த அருவருப்பு, மனித குலத்திற்கே அவமானம். இவரைப்போன்றவர்களை மூக்குடைப்பதற்கென்றே இன்னும் நிறையப் பெண்கள் ‘கும்பலாகக் கிளம்பி வரவேண்டும்’, இவர்களை மிதித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறவேண்டும்.