இன்று எங்கள் பகுதி அரசு நூலகத்துக்குச் சென்றிருந்தேன். வாசலில் இருக்கும் பதிவேட்டில் முன்பெல்லாம் பெயர், இடம், கையொப்பம்தான் கேட்பார்கள். ஆனால் இப்போது, வயது, தொழில், என்ன படித்திருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அனைத்தையும் யார் பொறுமையோடு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.
சரி நாமும் கொஞ்சம் Data திருடுவோம் என்று அந்தப் பதிவேட்டை மெல்லப் புரட்டிப் பார்த்தேன். அரை நிமிட அலசலில் எனக்குப் புரிந்த விஷயங்கள்:
1. பாதிக்குமேல் பொறியியல் படித்தவர்கள்
2. கிட்டத்தட்ட 90% பேர் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள்
நூலகத்தினுள் தென்பட்ட கூட்டம் என்னுடைய புரிந்துகொள்ளலை உறுதிப்படுத்தியது. அநேகமாக எல்லாரும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள். அவரவர் வசதிக்கேற்ப நோட்டுப் புத்தகம் அல்லது லாப்டாப் அல்லது ஐபேடுடன் உட்கார்ந்து குறிப்பெடுத்துத் தள்ளுகிறார்கள். அவர்களுடைய கண்களில் தெரியும் கூர்மையும் ஆவலும் உழைக்கிற வேகமும் வியக்கவைக்கின்றன.
தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கமுடியுமா? அவ்வப்போது நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து சிறிது நேரம் செல்ஃபோனை மேய்கிறார்கள். ஒருவர் மேசையில் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்குமுன்னால் பாதி எழுதப்பட்ட குறிப்புத் தாள்கள் அவர் விழித்தெழுந்து படிப்பைத் தொடரக் காத்திருந்தன.