ஒரு சிறு கடைக்குள் தேநீர் குடிக்க நுழைந்தேன். கடையினுள் சற்றுத் தொலைவிலிருந்த பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணெயில் ஏழெட்டுப் பூரிகள் நீந்திக்கொண்டிருந்தன. அதனருகில் ஒருவர் அவற்றைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தார்.
அவருடைய காலுக்கருகில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவருடைய மகனாக இருக்கலாம், அல்லது, வேலைக்கு அமர்த்தப்பட்டவனாக இருக்கலாம். அகன்ற பாத்திரமொன்றில் கிலோக்கணக்கில் வேகவைத்த உருளைக்கிழங்கை நசுக்கிக்கொண்டிருந்தான்.
ஓரமாக ஒரு மேசையில் பொட்டலம் கட்டும் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு அருகில் சுவாமி படம்.
எனக்குத் தேநீர் கொடுத்த பெண்மணி (பூரிக்காரருடைய மனைவி என்று ஊகிக்கிறேன்) ‘சமோசா, கச்சோரி எதாவது வேணுமா சார்?’ என்றார்.
‘வேணாம்ங்க’ என்று தேநீரைமட்டும் வாங்கிக்கொண்டேன்.
‘சாப்பிடுங்க சார், சூடா இருக்கு’ என்று கண்ணாடிப் பெட்டியைச் சுட்டிக்காட்டினார் அவர். அங்கு இரண்டு வகை சமோசாக்கள், இரண்டு வகைக் கச்சோரிகள், ஏகப்பட்ட ஜிலேபிகள், பாவுக்குள் செல்லவேண்டிய உருளைக்கிழங்கு வடைகள் மினுமினுத்தன. ஓரமாக இரண்டு பாத்திரங்களில் காரச் சட்னி, இனிப்புச் சட்னி. பெட்டிக்குமேல் பேடிஎம், ஃபோன்பே க்யூஆர் பொம்மைகள், பல அடுக்குகளாகப் பாவ் ரொட்டிகள்.
நான் தேநீர் குடிப்பதற்குள் அந்தப் பெட்டிக்குள்ளிருந்த 20% பண்டங்கள் விற்றுவிட்டன. எங்கிருந்தோ வந்துகொண்டே இருக்கிறார்கள், வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆர்டர்கள் வேறு. அந்தப் பெண்மணி அனைத்துக்கும் ஈடுகொடுத்துத் தட்டுகளையும் பொட்டலங்களையும் அதிவிரைவாக நிரப்புகிறார்.
யாராவது ‘எவ்ளோ ஆச்சு?’ என்று கேட்டால், ‘நீங்க என்ன சாப்பிட்டீங்க?’ என்று அவர்களையே கேட்கிறார். அவர்கள் சொல்லும் பட்டியலை வைத்துத்தான் தொகையைக் கணக்கிடுகிறார். சரிபார்க்கவெல்லாம் நேரமில்லை, வாடிக்கையாளருடைய நேர்மையை நம்பித்தான் ஆகவேண்டும்.
நான் அவரிடம் காலிக் கோப்பையைத் திரும்பக் கொடுத்தபோது, பூரி வாணலியைக் கவனித்தேன். அதன்முன் நின்றிருந்தவர் ஏதோ ஒரு மாவை விரலில் எடுத்து அடுப்பிலிருக்கும் ஒரு பூரியின்மீது ஒட்டுப்போட்டுக்கொண்டிருந்தார். அதைக் கண்டதும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது. நாமெல்லாம் கொதிக்கும் எண்ணைக்கு அருகில் செல்லக்கூட அஞ்சுவோம். இவரோ சிறிதும் சளைக்காமல் எண்ணெயில் கொதிக்கும் பூரிகளுக்கு அறுவைச் சிகிச்சையெல்லாம் செய்கிறார்.
இங்குள்ள சமோசா, கச்சோரியெல்லாம் இவர் படைத்தவையாகத்தான் இருக்கும். சரியாகக் கண்ணாடிப் பெட்டியைப் பார்த்துக்கொண்டே இருந்து, எது குறைகிறது என்று பார்த்துச் சுடச்சுடச் சமைத்து நிரப்புவார். அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை முன்கூட்டியே கரைத்து, பிசைந்து, கலக்கி, நறுக்கிவைத்துக்கொள்வார். வாராவாரம் அந்த வாரத்துக்கு வேண்டிய மளிகைப் பொருட்கள், காய்கறிகளைக் கணக்கிட்டு மொத்தமாக வாங்குவாராக இருக்கும்.
சிறு கடை என்கிறோம். ஆனால், இதுவும் ஒரு தொழிற்சாலைதான். Purchase Management, Inventory Management, Production, Quality Control, Sales, Customer Support என எல்லாவற்றையும் இவர்களே கவனித்துக்கொண்டுவிடுகிறார்கள். அதுவும் வார விடுமுறை, எட்டு மணிநேர வேலைக் கணக்கெல்லாம் இல்லாமல்!
இப்படிக் கஷ்டப்பட்டு உழைத்தால், சில ஆண்டுகளுக்குப்பிறகு இந்தக் கடை விரிவாகும், சில கிளைகள் திறக்கப்படும், ஓரிரு தலைமுறைகளில் இவர்களைப் பெங்களூரின் இந்தப் பகுதி நன்றாக அறிந்திருக்கும். கொஞ்சம் முனைப்பும் ஊக்கமும் இருந்தால் இவர்கள் மாநில அளவில், இந்திய அளவில் வளர்வதுகூட சாத்தியம்தான். எல்லாம் அவரவர் கையிலும் மனத்திலும்தான் இருக்கிறது.
***
தொடர்புடைய பதிவுகள்:
1 Comment