அலுவலக நண்பருடைய குழந்தைகள் இருவரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மறுநாள் இருவருக்கும் கடுமையான வயிற்று வலி, பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டார்கள்.
விசாரித்துப்பார்த்தால், இவர்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பல குழந்தைகளுக்கு அதே வயிற்று வலி. அவர்களும் பள்ளிக்கு விடுமுறை.
ஆக, அந்தப் பிறந்தநாள் விழாவில் பரிமாறப்பட்ட உணவில்தான் ஏதோ பிரச்சனை இருக்கவேண்டும். அதனால், இவர் அந்தப் பிறந்தநாள் குழந்தையின் பெற்றோரைத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார். அவர்கள், ‘நாங்க கொடுத்த சாப்பாட்டுல எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்க பிள்ளைங்க ரெண்டு பேரும் அதைத்தான் சாப்பிட்டாங்க, நல்லாத்தான் இருக்காங்க’ என்று கடும் சினத்துடன் பதில் சொல்லியிருக்கிறார்கள். இவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டுவிட்டார்.
இன்று, அவருடைய குழந்தைகள் நலமாகிவிட்டார்கள், பள்ளிக்குத் திரும்பிவிட்டார்கள். அங்கு அவர்கள் அந்தப் பிறந்தநாள் குழந்தையுடன் பேசியபோது, ‘எனக்கும் நேத்திக்கு வயித்து வலி, டாக்டரைப் பார்த்து மருந்து சாப்பிட்டேன்’ என்று அப்பாவியாகச் சொல்லியிருக்கிறது.
அப்படியானால், அந்தப் பெற்றோர் சொன்னது பொய். தாங்கள் பரிமாறிய உணவைச் சாப்பிட்டுப் பலருக்கு உடல்நலம் கெட்டுவிட்டது என்று தெரிந்தால் ஏதாவது தொல்லை வரும் என்று அச்சப்பட்டு உண்மையை மறைத்திருக்கிறார்கள். தங்களுடைய செயலால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் தங்கள் பிள்ளைகளைப்போல் சிறு குழந்தைகள்தான் என்றபோதும் அவர்கள் மனத்தில் சிறு பரிவோ இரக்கமோ உண்டாகவில்லை, பிழைக்குப் பொறுப்பேற்கவோ பாதிக்கப்பட்டோருக்கு உதவவோ எதையும் செய்யவில்லை.
எதற்கு இந்த வேடமெல்லாம்? விளைவுகளுக்குப் பொறுப்பேற்கத் தயங்குகிறவர்கள் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது, அதனால் கிடைக்கும் கனிகளுக்கும் ஆசைப்படக்கூடாது.