என்னுடைய Nonfiction வகுப்பில் ஒரு Rapidfire பயிற்சி உண்டு. இந்த வகுப்பிலேயே அநேகமாக எல்லா மாணவர்களுக்கும் (எனக்கும்தான்) மிகவும் பிடித்த பகுதி அதுதான்.
அதாவது, கொடுக்கப்படும் தலைப்பில் 30 நிமிடங்களுக்குள் ஆராய்ச்சி செய்து, தகவல்களைத் திரட்டி, உறுதிப்படுத்தி, குறிப்புகளை எழுதி, மனக்காட்சியை உருவாக்கிக்கொண்டு, சுமார் 150 சொற்களில் ஒரு கட்டுரை எழுதவேண்டும், அதைத் திருத்திச் (Edit செய்து) சமர்ப்பிக்கவேண்டும். அதன்பிறகு, மாணவர்களில் யாரேனும் ஒருவர் எழுதிய கட்டுரையை எடுத்துக்கொண்டு நாங்கள் அனைவரும் அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து 20 நிமிடங்களுக்கு விவாதிப்போம், கற்றுக்கொள்வோம்.
நேற்றைய வகுப்பில் அந்தப் பயிற்சி தொடங்கியபோது ‘எல்லாரும் எழுதுகிறார்கள், நாமும் சும்மா இருக்காமல் ஒரு கட்டுரை எழுதுவோம்’ என்று நினைத்தேன். வகுப்புக்குமுன் தேநீர் குடித்த கடையின் நினைவு வந்தது. சட்டென்று தீர்மானித்து 15 நிமிடத்தில் எழுதிய கட்டுரை அது. ‘ஒரு சிறு கடை’ என்ற அந்தக் கட்டுரையை ஏராளமானோர் விரும்பிப் படித்திருப்பதும் பதிலளித்திருப்பதும் மிகுந்த மகிழ்வளிக்கிறது. (இதுவரை படிக்காதோர் இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.)
இத்தனைக்கும் அந்தக் கட்டுரையில் தனித்துவமான செய்தி, தகவல் என்று எதுவும் இல்லை. நாம் எல்லாரும் பார்த்திருக்கக்கூடிய வழக்கமான கடைதான் அது. அப்படி அடிக்கடி பார்ப்பதாலேயே இதுபோன்ற நல்ல கணங்களை, மனிதர்களைக் கவனிக்காமல், ரசிக்காமல் விட்டுவிடுகிறோம். சுவை என்பது சிகரத்தில்மட்டுமில்லை, அதை நோக்கிச் செல்லும் வழியிலும் இருக்கிறது.