Paytm நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா, ‘பள்ளி நாட்களுக்குப்பின் நான் இதுவரை (45 வயது) இரண்டு புத்தகங்களைமட்டும்தான் படித்துள்ளேன்’ என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் படிப்பில் ஆர்வம் இல்லாதவரெல்லாம் இல்லை. ‘நான் பள்ளி மாணவனாக இருந்தபோது என் அக்காவின் BA/MA புத்தகங்களையெல்லாம்கூட ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்’ என்றும் அவரே சொல்கிறார்.
ஆனால், அந்த BA/MA புத்தகங்கள் இந்தி மொழியில் அமைந்திருந்தன. பொறியியல் கல்லூரிக்குச் செல்லும்வரை அவர் ஆங்கிலத்தில் எந்தப் பாடப் புத்தகத்தையும் படித்ததில்லையாம்.
அப்படியானால், விஜய் சேகர் சர்மா புத்தகம் படிக்காததற்குக் காரணம் ஆங்கிலம்தான் என்று சொல்லிவிட இயலாது. இந்தியிலும் பல நல்ல புத்தகங்கள் உள்ளன. அவர் அவற்றைப் படித்திருக்கலாம். இந்தியாவில் தாய்மொழி வழிக் கல்வி பெற்ற பலரும் கல்லூரியில்தான் முதன்முதலாக ஆங்கிலப் புத்தகங்களைப் புரட்டியிருப்பார்கள். அவர்களில் பலர் பின்னாட்களில் பெரிய வாசகர்களானதைக் கண்டுள்ளேன். நானும் அந்த வகைதான்.
புத்தகம் படிப்பது என்பது ஒரு மனநிலை. அது ஒரு பொழுதுபோக்கும்தான் என்றாலும், அது ஒரு வேலையும்கூட. அது மிகுந்த உடல், மூளை உழைப்பைக் கோருவது. அதன்பிறகும் அதன் பலன்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. ஐந்து கிலோமீட்டர் ஓடிவிட்டு வந்து எடை இயந்திரத்தில் ஏறிப் பார்ப்பதுபோல் புத்தகம் படித்துவிட்டு மூளையைத் தொட்டுப்பார்த்தால் எதுவும் தெரியாது. இந்தக் காரணங்களால் பலருக்கும் அதன்மீது ஆர்வம் வருவதில்லை. வரலாற்றில் எப்போதும் புத்தகம் படிக்கிறவர்கள், அதிலும் குறிப்பாக, பாடத் தலைப்புகளைத் தாண்டிப் படிக்கிறவர்கள் மிக மிகச் சிறுபான்மையினராகதான் இருந்துவந்திருக்கிறார்கள். இனியும் அப்படித்தான் இருப்பார்கள்.
ஆனால், சமூகத்தில், வரலாற்றில் மாற்றத்தை உண்டாக்கியவர்களைக் கணக்கெடுத்துப்பார்த்தால் அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தீவிரமாகப் படிக்கிறவர்களாக இருப்பார்கள். அதுவும் ஒரு தலைப்பில் கூர்ந்து ஆழமாகப் படிக்கிறவர்களாக இருப்பார்கள். அதன்மூலம் கிடைக்கும் கனிகள் அவர்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவியிருக்கும், அல்லது, குறைந்தபட்சம் அடிப்படைத் தெளிவை, அறிவைக் கொடுத்து வழிநடத்தியிருக்கும்.
புகழ் பெற்ற ஒருவர் ‘நான் புத்தகம் எதுவும் படித்ததில்லை’ என்று சொன்னால் திடுக்கிடவேண்டியதில்லை, அவரை இழிவாக எண்ணவேண்டியதில்லை, புத்தகம் படிக்கும் பழக்கம் வீண் என்ற தீர்மானத்துக்கும் வரவேண்டியதில்லை. புத்தகம் படிப்பதால் வரக்கூடிய பல நன்மைகள் இல்லாமலும் இவர்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளார்கள் என்றுதான் இதைப் பார்க்கவேண்டும். இவர்கள் உண்மையில் விதிவிலக்குகள்தான், இந்த விஷயத்தில் பின்பற்றவேண்டிய முன்னோடிகள் இல்லை.