நேற்று எங்கள் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுடைய உலகத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதுபற்றி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதை மிகச் சிறப்பாக வழிநடத்தியவரும் ஒரு மாற்றுத் திறனாளிதான்.
நிகழ்ச்சியின் நடுவில், அவர் பங்கேற்பாளர்களில் இருவரை அழைத்து ஒரு சிறு நாடகம் நடத்தினார். ஒருவரைக் கண் தெரியாததுபோல் நடிக்கச்சொன்னார், இன்னொருவரை அவருக்கு வழிகாட்டி உதவச்சொன்னார். அவர்கள் சுமார் ஒரு நிமிடத்துக்கு இப்படி நடித்தபிறகு, அவர்களை அமரச்சொல்லிவிட்டு எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘இப்போது நீங்கள் பார்த்த நாடகத்தில் ஏதாவது பிரச்சனையைக் கவனித்தீர்களா?’
‘பிரச்சனை எதுவுமில்லை, எல்லாம் சரியாகதான் இருந்தது’ என்றோம் நாங்கள்.
அவர் சிரித்தார், ‘இதில் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. ஆனால், அது உங்களுக்குத் தெரியாது, பார்வையற்ற ஒருவருக்குதான் தெரியும்’ என்றார்.
அப்படி என்ன பிரச்சனை?
பார்வையற்றோருக்கு வழிகாட்டி உதவும்போது, நாம் அவர்களுடைய கையைப் பிடிக்கக்கூடாதாம். நாம் அப்படிப் பிடித்து அழைத்துச்சென்றால், தாங்கள் இழுத்துச்செல்லப்படுகிறோம், இதில் தங்களுடைய பங்களிப்பு ஏதுமில்லை என்பதுபோல் அவர்கள் உணர்வார்களாம்.
அதற்குப்பதிலாக, ‘என் கையைப் பிடிச்சுக்கோங்க’ அல்லது ‘என் தோள்பட்டையைப் பிடிச்சுக்கோங்க’ என்று சொல்லவேண்டுமாம். ‘அதன்பிறகு, நீங்கள் வழக்கம்போல் நடந்தால் அவர்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவார்கள். அதுதான் உண்மையான வழிகாட்டுதல், அவர்களை மதித்து நடத்துதல்’ என்று விளக்கினார் அவர்.
நாம் அவர்களைப் பிடிப்பது, அவர்கள் நம்மைப் பிடிப்பது என இது ஒரு சிறிய மாற்றம்தான். ஆனால், மனத்தளவில் அது எப்பேர்ப்பட்ட வேறுபாட்டைக் கொண்டுவருகிறது! நேற்றுமுதல் திரும்பத் திரும்ப இதைப்பற்றியேதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த அறிவுறுத்தல் எல்லா வழிகாட்டுதல்களுக்கும் பொருந்தும். ஒருவர் நம்மிடம் ஏதோ உதவி கேட்கிறார் என்பதால் அவரைப் பிடித்து இழுத்துச்செல்லவேண்டியதில்லை, தூக்கிச்சென்று மறுமுனையில் உட்காரவைக்கவேண்டியதில்லை. உண்மையில் அது உதவியும் இல்லை. அதற்குப்பதிலாக, அவர்களே அந்தச் செயலைச் செய்ய வழிகாட்டினால் போதும், அதில் வரக்கூடிய பிரச்சனைகளைச் சரி செய்ய உதவினால் போதும், அவர்கள் மேலும் தன்னம்பிக்கை பெறுவார்கள், அடுத்தமுறை தாங்களாகவே அதைச் செய்துவிடுவார்கள்.