நங்கை தன் நண்பர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் வாங்குவதில்லை. அவளே படம் வரைந்து தயாரித்த அட்டையைத்தான் பரிசளிப்பாள். ஒவ்வொருவருடைய ஆளுமை, விருப்பங்களைச் சிந்தித்துத் தனித்துவமான அட்டைகளை மிகுந்த முனைப்புடன் உருவாக்குவாள்.
அப்படி அவள் தன்னுடைய கல்லூரித் தோழர்களுக்கு உருவாக்கிய சில வாழ்த்து அட்டைகளைப் பார்த்த தோழி ஒருத்தி ‘எனக்கும் இதுபோல ஒரு கிரீட்டிங் கார்ட் வரைஞ்சு கொடு’ என்று கேட்டிருக்கிறாள், ‘அடுத்த வாரம் என் ஃப்ரெண்டுக்கு பர்த்டே வருது.’
அந்தத் தோழி சும்மாக் கேட்கவில்லை, Customized Greeting Cardக்குப் பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறாள்.
நங்கை மன மகிழ்ச்சிக்கும் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் படம் வரைகிறவள். அதனால் அவள் இதற்குப் பணமெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்தத் தோழி வற்புறுத்திப் பணம் கொடுத்திருக்கிறாள்.
இன்றைக்கு நங்கை இதையெல்லாம் என்னிடம் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல்லி அந்தப் படத்தையும் காண்பித்தாள். பார்த்துவிட்டு, ‘படம் சூப்பரா இருக்கு’ என்றேன், ‘இதுக்கு உன் ஃப்ரெண்ட் எவ்ளோ ரூபாய் தந்தா?’
‘எவ்ளோ தர்றதுன்னு அவளுக்குத் தெரியலை. அதனால, என்னையே சொல்லச்சொன்னா.’
‘சரி, நீ எவ்ளோ வாங்கினே?’
’20 ரூபாய்,’ வாயெல்லாம் பல்லாகச் சொன்னாள் நங்கை.
வரலாறு ஒருபோதும் மாறுவதில்லை, கலைஞர்கள் எப்போதும் அப்பாவித்தனம் நிறைந்த ஏமாளிகள்தாம்!