இன்று காலை ஒரு தாளைக் கத்தரிக்கோல் கொண்டு வெட்டவேண்டியிருந்தது. என்னுடைய வலக்கையில் சற்று அழுக்கு பட்டிருந்ததால் இடக்கையால் வெட்ட முயன்றேன்.
ம்ஹூம், கத்தரிக்கோல் வெட்ட மறுத்தது.
கையைத் தூய்மைப்படுத்திக்கொண்டு வலக்கையால் வெட்டினேன். அதே கத்தரிக்கோல், அதே தாள், ஆனால் இப்போது அழகாக வெட்டியது.
கத்தரிக்கோலை மீண்டும் இடக்கைக்கு மாற்றி வெட்ட முயன்றேன், வெட்டவில்லை.
இது எனக்கு மிகுந்த வியப்பளித்தது. வலக்கை, இடக்கை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வலிமை கொண்டவைதானே? ஒரு கத்தியையோ சுத்தியலையோ எந்தக் கையில் பயன்படுத்தினாலும் வேலை செய்யும்தானே? பிறகு ஏன் கத்தரிக்கோல்மட்டும் இடக்கையில் வெட்ட மறுக்கிறது?
இதைப்பற்றி இணையத்தில் தேடியபோது வியப்பளிக்கிற பல தகவல்கள் கிடைத்தன. கத்தரிக்கோலின் வடிவமைப்பு காரணமாகக் கை மாறும்போது அதன் செயல்பாட்டுத்தன்மையும் மாறிவிடுகிறது என்று தெரிந்துகொண்டேன். அதாவது, வலக்கையைக் கொண்டு கத்தரிக்கோலைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள வெட்டும் முனைகள் இரண்டும் ஒன்றாக நெருங்கிச் சேர்ந்து வெட்டுகின்றன. அதே கத்தரிக்கோலை இடக்கையில் வைத்துப் பயன்படுத்தினால் வெட்டும் முனைகள் விலகிச் செல்கின்றன, அதனால் வெட்டமுடிவதில்லை.
அப்படியானால், இடக்கைப் பழக்கம் கொண்டவர்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்தவே முடியாதா?
பிரச்சனையில்லை. அவர்களுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கத்தரிக்கோல் கிடைக்கிறது. ஆனால், அதை வலக்கையில் பயன்படுத்தினால் வெட்டாது.
இதையெல்லாம் படித்தபிறகு நெடுநேரம் அந்தக் கத்தரிக்கோலைப் பலவிதமாகப் பிடித்து, சுழற்றி, நகர்த்திப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன். ஒரு சாதாரணக் கருவி என்று நினைக்கிறோம், அதற்குள் எத்தனை அதிசயங்கள்!