நேற்றிரவு ஒரு கனவு.
அது ஒரு மலைவாழிடம். நான் அங்கு ஒரு மருத்துவரைத் தேடி நடக்கிறேன். யாரோ ஒருவரிடம் அந்த மருத்துவருடைய மருத்துவமனை எங்கு இருக்கிறது என்று விசாரிக்கிறேன். ‘அதோ, அங்க இருக்கு’ என்று கை காட்டுகிறார் அவர்.
ஆனால், அவர் கை காட்டிய இடத்தில் ஒரு சிறிய உணவகம்தான் உள்ளது. அதன் வாசலில் ‘இங்கு சூடான இட்லி, தோசை கிடைக்கும்’ என்று ஒரு சிலேட்டுப்பலகையில் கையால் எழுதிப் போட்டிருக்கிறார்கள்.
‘அதான் நீங்க கேட்கற மருத்துவமனை’ என்கிறார் அந்த மனிதர். ‘தயங்காம உள்ள போங்க, டாக்டர் இருப்பாரு.’
ஆம். அவர் சொன்னதுபோல் அந்த உணவகத்துக்குள் ஒரு மூலையில் மருத்துவர் அமர்ந்திருக்கிறார். ‘வாங்க, வாங்க, உட்காருங்க’ என்று என்னை வரவேற்கிறார் அவர், ‘இந்த ஊர்ல எனக்கு டிஸ்பென்சரி வைக்கறதுக்கு வாடகைக்கு இடம் கிடைக்கலை. அதனால, இந்த மெஸ்ல ஒரு மூலையை உள்வாடகைக்கு எடுத்துக்கிட்டேன்’ என்கிறார்.
மூலை என்றால், சின்னஞ்சிறிய மூலை. அங்கு அவர் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் அமரக்கூடிய நீளமான ஓர் இருக்கையும் மேசையும் உள்ளன. அதில் இரண்டு இடங்கள் உணவகத்துக்கு, மருத்துவருக்கு அருகில் விளிம்பில் உள்ள ஓர் இடம்மட்டும் மருத்துவருடைய நோயாளிகளுக்கு.
நான் தயக்கத்துடன் அங்கு அமர்கிறேன். என்னருகில் இருவர் வாழை இலையை விரித்து, நீர் தெளித்து மசால் தோசை சாப்பிடுகிறார்கள். எனக்கும் வாழை இலையில் மாத்திரை, டானிக் போன்றவை பரிமாறப்படுமோ என்று யோசிக்கிறேன்.
‘சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறார் மருத்துவர்.
நான் தணிந்த குரலில் பேசத் தொடங்குகிறேன், ‘சளி, இருமல், காய்ச்சல்’ என்று ஏதோ சொல்கிறேன்.
‘ஓ, இந்த நோய்க்குப் பேர் _‘ என்கிறார் மருத்துவர்.
‘அப்படியா?’ என்று நான் வியப்புடன் கேட்கிறேன்.
‘ஆமாங்க’ என்கிறார் என்னருகில் மசால் தோசை சாப்பிடுகிறவர். தன்னிடமிருந்த சிவப்பு அட்டை போட்ட ஒரு புத்தகத்தைப் பிரித்து 157வது பக்கத்தில் இருந்த ஒரு பத்தியைக் காட்டுகிறார். அதில் என்னுடைய நோய் அறிகுறிகளும் மருத்துவர் சொன்ன நோயின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளன.
‘இதுக்கு நான் என்ன செய்யணும் டாக்டர்?’
‘ரொம்ப சுலபம்’ என்கிறார் டாக்டர், ‘வேகவெச்ச கோதுமை சாப்பிட்டாப் போதும். ஆனா ஒண்ணு, வெந்தபிறகு அந்தக் கோதுமையோட நீளம் குறைஞ்சது ஒரு சென்டிமீட்டர் இருக்கணும்.’
‘டாக்டர், அவ்ளோ நீளமான கோதுமைக்கு நான் எங்க போவேன்?’
‘கவலைப்படாதீங்க, இந்த மெஸ்ல அந்தக் கோதுமை கிடைக்கும். வாங்கிச் சாப்பிடுங்க. யு வில் பீ ஆல்ரைட்’ என்கிறார் மருத்துவர்.
மறுகணம், மெஸ்ஸில் உணவு பரிமாறும் பெண் ஒரு கிண்ணம்முழுக்க வேகவைத்த கோதுமையுடன் வருகிறார். அதில் எல்லாக் கோதுமைகளும் பாஸ்மதி அரிசிபோல் நீளநீளமாக இருக்கின்றன. சாப்பிடுவதற்கு நல்ல சுவை.
அதைச் சாப்பிட்டபின் என்னுடைய நோய் குணமாகிவிடுகிறது. ‘எவ்ளோ?’ என்கிறேன் அந்தப் பெண்ணிடம். ‘எட்டு ரூபாய்’ என்கிறார். கொடுத்துவிட்டு வெளியில் வருகிறேன்.
நல்ல மருத்துவம், நல்ல மருத்துவர், ஃபீஸ்கூட வாங்கிக்கொள்ளவில்லை!