ஈபுக்ஸ் எனப்படும் மின்னூல்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் உள்ளது என்கிற உண்மை பதிப்பாளர்கள், தனிப்பட்ட எழுத்தாளர்கள் என்று எல்லாருக்கும் புரிந்துவிட்டது என நினைக்கிறேன். பழைய சிந்தனையால், அல்லது, ‘பைரசி’ அச்சத்தால் ஒதுங்கி நிற்கிறவர்கள் குறைவுதான், பெரும்பாலானோர் இங்கு வந்துவிட்டார்கள், அல்லது வந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், மின்னூலுக்கென்றே எழுதுகிற, பதிப்பிக்கிற புதிய எழுத்தாளர், பதிப்பாளர் தலைமுறை உருவாகியிருக்கிறது. முன்பு அச்சில் எழுதி, பதிப்பித்துக்கொண்டிருந்தவர்களும் மின்னூல் சந்தையைக் கவனித்து அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
அதே நேரம், மின்னூலின் சாத்தியங்களை எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவோ, பயன்படுத்திக்கொள்ளவோ இல்லை என்றே சொல்வேன். பழைய நூல்களை மின்வடிவத்துக்குக் கொண்டுவருகிற முக்கியமான பணிதான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. அதன்பிறகுதான் இந்தக் களத்துக்கென்று எழுதப்படும் நூல்கள் வரும், அவை பதிப்பிக்கப்படுகிற வகையிலும் பெரிய மாற்றங்கள் நிகழும்.
எடுத்துக்காட்டாக, இதுபற்றிச் சிந்திக்கும்போது எனக்கு உடனே தோன்றுகிற சில விஷயங்கள் இவை. இன்றைக்கு இவையெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லமாட்டேன், ஆனால், மிகுதியாக நடக்கவில்லை என்பேன், வருங்காலத்தில் இவையே இயல்பாக மாறிவிடும் என்பது என்னுடைய கணிப்பு:
1. நூல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படும்; ஒரு சிறு தகவல் கூடுதலாகக் கிடைத்தாலும் அதைச் சேர்த்து மெருகேற்றுவார்கள்
2. ஒரே நூலைப் பல பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு விலைகளில் வெளியிடுவார்கள்; மக்கள் வேண்டியதைமட்டும் வாங்கிக்கொள்ளலாம்
3. ஒரே நூல் 50 பக்கத்தில், 100 பக்கத்தில், 1000 பக்கத்தில் என்று வெவ்வேறு வடிவத்தில்கூட (இயந்திரக் கற்றல் நுட்பத்தின் உதவியுடன்) வெளியாகலாம்; எதை வாங்குவது என்று மக்கள் தீர்மானிப்பார்கள்; 50 பக்கத்தைப் படித்தபின், பிடித்திருந்தால் 1000 பக்க வடிவத்தைத் தள்ளுபடி விலையில் வாங்கலாம்
4. மின்னூலுடன் ஒலி நூல் நெருக்கமாகப் பிணைக்கப்படும், இதை வாங்கினால் அதில் தள்ளுபடி, இங்கே ஓர் அத்தியாயம், அங்கே இரண்டு அத்தியாயம் என மாற்றி மாற்றிப் படிக்கும் வசதி வரும்
5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் படித்தபின் அந்த நூல் பிடிக்காவிட்டால் திருப்பித்தந்து பாதிப் பணத்தை (அல்லது, முழுப் பணத்தையும்) திரும்பப் பெறுகிற வசதி வரும்
6. நூலில் எந்தப் பகுதிகளை வாசகர்கள் கூடுதலாக விரும்புகிறார்கள், எந்த அத்தியாயங்களை விரைவாக(அல்லது மெதுவாக)ப் படிக்கிறார்கள், எந்தப் பகுதிகளைத் திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள், நூலுக்குள் எதைத் தேடுகிறார்கள் என்பதையெல்லாம் கவனித்து அதற்கேற்ப அடுத்த நூல்களைத் திட்டமிடும் வசதி கிடைக்கும்
7. பலர் சேர்ந்து நூல் எழுதும் வழக்கம் மிகுதியாகும். ஒரு நூலில் 5 அத்தியாயங்களைமட்டும் நான் எழுதுகிறேன் என்றால், அந்த 5 அத்தியாயங்களை யார் படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எனக்குப் பணம் கிடைக்கும், மீதமுள்ள பணம் அதே நூலின் மற்ற அத்தியாயங்களை எழுதியுள்ள என் சக எழுத்தாளர்களுக்குச் செல்லும்
8. எழுதியபின் அறிவிக்கும் வழக்கம் மாறி, ‘அடுத்து இதை எழுதலாம் என்று இருக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று எழுத்தாளர்கள் வாசகர்களைக் கேட்கத் தொடங்குவார்கள், அல்லது, அடுத்து என்ன எழுதலாம் என்றே ஆலோசனை கேட்பார்கள்
இந்த எட்டாவது விஷயத்தை நாமே தொடங்கி வைப்போம். அடுத்து நான் என்ன எழுதலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
1, தமிழ் எழுத்துரு தரக்கட்டுப்பாடு எந்த ஒரு தரத்திலும் முழுமை பெறாத வரையில் இது சாத்தியப்படாது தானே. தவளை தண்ணீருக்கு இழுத்தால் எலி தரைக்கு இழுக்கின்றது என்று சொல்லும்படியாக தானே இருக்கு
2, அமேசான் கிண்டில் ஐ மட்டுமே நம்பி எழுத வேண்டி இருப்பதாக உள்ளது என்பதை எப்படி பார்க்கிறீர்கள்.
3, எழுதுகின்ற ஒரே நூல், மற்ற கருவிகளுக்கும் ஆன மின்னூலாக வெளிவராத வகையில் இது முழுமையாக எவ்வாறு சாத்தியப்படும்.
1. தமிழ் ஒருங்குறி (யுனிகோட்) தரப்படுத்தப்பட்டுவிட்டதே; இதில் இன்னும் சில நுட்பச் சிக்கல்கள் இருக்கலாம், அவற்றைத் தெரியப்படுத்துங்கள்
2. கிண்டில்தான் மின்னூல் சந்தையில் ஆட்சி செய்கிறது என்பது உண்மை; அதே நேரம், மற்றவர்களும் இதில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறார்கள்; நாம் இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும், மற்றவற்றை முயலவேண்டும். தனிப்பட்டமுறையில் நான் நேரக்குறைவால்தான் கிண்டிலைச் சார்ந்துள்ளேன், வருங்காலத்தில் பிற தளங்களிலும் நுழைவேன்.
3. ஒரே நூலைப் பல தளங்களில் வெளியிடும் வசதிகள் உள்ளன; அவற்றில் ஒன்றைச் சில மாதங்கள் முன்பு முயன்றேன், ஆனால், அதன் பெயர்கூட மறந்துவிட்டது. மீண்டும் முயலவேண்டும்.
கிண்டில் ஒன்றையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது
வணக்கம் சொக்கன் நலமா அமேசானில் வெளியிடப்படும் புத்தகங்களுக்கு அடிக்கடி விளம்பரம் தேவை என்று நினைக்கிறேன் புத்தகம் வெளியிட்டுவிட்டால் மட்டும் போதுமா அவை விற்க வேண்டுமானால் அது அமேசானிலே வெளியிடப்பட்ட நூலாக இருந்தாலும் அதற்கும் போதுமான விளம்பரம் இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நம் புத்தகத்தை இன்னொரு எழுத்தாளர் படித்து விமர்சனம் எழுதலாம் அவர் புத்தகத்தை நாமும் படித்து விம்ரசனம் எழுதலாம் அந்த விமர்சனங்களை பகிரும் முகநூல் போன்றவற்றில் பகிரும்
போதும் அது விளம்பரமாகலாம்
வாசகர்கள் படிக்கும் பொறுமையை ஏற்கெனவே இழந்துவிட்டார்கள் ஆகையால் அவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலே நம் விமர்சனங்களும் விளம்பரங்களும் இருக்க வேண்டும் மேலும் நம் படைப்புக்களை ஒலியாக மாற்றித்தான் இனி வாசகர்களை அடைய வேண்டும்
அன்புடன்
தமிழ்த்தேனீ