கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களுடைய சமீபத்திய பேட்டியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் அவர் ஒரு சுவையான அனுபவத்தைச் சொல்கிறார்.
சுந்தர் கூகுளில் சேர்ந்த புதிது. அங்கு அவர் பலரைச் சந்திக்கிறார், தன்னிடம் உள்ள புதிய யோசனைகளை, கருத்துகளைச் சொல்கிறார்.
பொதுவாக, இதுபோன்ற புதிய யோசனைகளைக் கேட்கிறவர்கள் இரண்டுவிதமாகப் பதில் சொல்வார்கள்:
வகை 1: ‘ம்ஹூம், இது சரிப்படாது’ என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, ‘ ஏன்னா…’ என்று அதற்குக் காரணங்களை அடுக்குகிறவர்கள்.
வகை 2: ‘அட, நல்ல யோசனையா இருக்கே’ என்று பாராட்டிவிட்டு, ‘இதோட நீங்க இந்த விஷயத்தையும் சேர்த்தீங்கன்னா இது இன்னும் நல்லா வரும்’ என்று வழிகாட்டுகிறார்கள்.
இந்த இரண்டாவது வகை மக்களை ‘people who expand on your ideas’ என்று அழைக்கிறார் சுந்தர். அதாவது, உங்கள் யோசனைகளை முறித்துப்போடாமல் அவற்றை விரிவுபடுத்திச் சிறப்பாக்க, வெற்றிபெற உதவுகிறவர்கள்.
கூகுளில் இந்த இரண்டாவது வகை மக்கள் மிகுதியாக இருந்தார்களாம். அதனால்தான் சுந்தர் வேறு நிறுவனங்களைப்பற்றிச் சிந்திக்காமல் கூகுளில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றத் தீர்மானித்தாராம்.
இந்த அனுபவத்தைக் கேட்டபோது, என்னைச் சுற்றியிருக்கிறவர்களில் யாரெல்லாம் வகை 1, யாரெல்லாம் வகை 2 என்று யோசித்துப்பார்த்தேன். இதில் நான் எந்த வகை என்றும் யோசித்துக்கொண்டேன். யாருடைய யோசனையையும் (அது நம் பார்வையில் படுமுட்டாள்தனமாக இருந்தாலும்) ஒரே வரியில் முறித்துப்போடுவது அவர்களுக்கு எவ்வளவு சோர்வளிக்கும் என்று புரிந்தது.
அதற்காக, விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துகள் கூடாது என்று பொருள் இல்லை. நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் வகை 2 ஆட்கள் இருந்தால், ஒவ்வொரு யோசனையும் திறந்த மனத்துடன் அணுகப்படும், அலசப்படும், விரிவு பெறும், முதிர்வு பெறும், அவ்வாறு வேலை செய்வது நமக்கும் மன நிறைவை அளிக்கும்.
***
தொடர்புடைய புத்தகம்: கூகுள்: வெற்றிக்கதை by என். சொக்கன்