இன்று பலத்த மழையில் மாட்டிக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒரு வீட்டின் சுற்றுச்சுவருக்கு அருகில் நிற்கவேண்டியதாகிவிட்டது.
உண்மையில் அந்தத் தெருமுழுவதும் வரிசையாக வீடுகள்தான். எந்தக் கடையோ கூரையோ இல்லை. அதனால், மழைக்கு ஒதுங்குவதற்கு இடம் ஏதும் இல்லை. நல்லவேளையாக, இந்த வீட்டின் முதல் மாடியிலிருந்த அரை வட்டப் பால்கனி சுற்றுச்சுவரைத் தாண்டிச் சிறிதளவு நீண்டிருந்தது. அதனால் கிடைத்த சிறு நிழலில் நான் ஒதுங்கி நின்றுகொண்டேன்.
பெங்களூரில் பெரும்பாலான மழைப்பொழிவுகள் ஐந்து நிமிடத்தில் நின்றுவிடும். ஆனால், இந்த மழை நிற்பதாகத் தெரியவில்லை, நிமிடத்துக்கு நிமிடம் வலுப்பெற்றுக்கொண்டிருந்தது, இன்னும் சிறிது நேரத்தில் நீ ஒதுங்கி நிற்கிற இடத்தையும் ஆக்கிரமித்துவிடுவேன் என்பதுபோல் செல்லமாக மிரட்டியது.
எனக்கு முன்னால் நீண்டு, விரிந்து கிடந்த தெருவில் யாரும் இல்லை, ஒரு மணிநேரமும் எந்த வீட்டுக் கதவும் திறக்கவில்லை, சினிமாவில் வருவதுபோல் மழையில் கப்பல் விட்டு விளையாடும் குழந்தைகளும் இல்லை. பல கார்களும் சில பைக்குகளும்தான் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டிருந்தன.
மழை விடுவதுபோல் தோற்றமளித்த நேரம். ஒருவர் விறுவிறுவென்று வந்தார், அரைக்கால் சட்டை அணிந்திருந்தார், பக்கத்திலிருக்கிற மளிகைக்கடைக்குச் செல்கிறவரைப்போல் தோன்றினார்.
அவருக்குப் பின்னால் குடையைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் வந்தார், ‘ஏய், மழையில நனையாதே, குடை எடுத்துக்கிட்டுப் போ’ என்று அந்த ஆளைக் கனிவோடு அதட்டினார்.
‘அதெல்லாம் வேணாம், மழை விட்டுடுச்சு’ என்றார் அந்த ஆள். ‘நீ வீட்டுக்குப் போ.’
‘இல்லை, இல்லை, இன்னும் பெஞ்சுகிட்டுதான் இருக்கு, நீ குடையை வாங்கிக்கோ.’
‘வேணாம் வேணாம்’, ஆண்கள் எப்போதும் சிறு மழையை அலட்சியப்படுத்துகிற அதே தோரணையில் மறுத்தார் அந்த ஆள். ஆனால், தான் குடையை வாங்கிக்கொண்டுவிட்டால் அந்தப் பெண் மழையில் நனைவார் என்றுதான் அவர் தயங்குவதாக எனக்குத் தோன்றியது.
அப்போதும் அந்தப் பெண் விடவில்லை. அக்கறையுடன் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டுதான் இருந்தார். இந்தப் போட்டியில் யார் வெல்வார்கள் என்று நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஓரிரு விநாடிகளுக்கு இருவரும் பேசவில்லை. ‘சரி, இங்க நிப்போம், மழை விட்டப்புறம் ரெண்டு பேருமாப் போவோம்’ என்றார் அந்தப் பெண். அவரும் அதை ஒப்புக்கொண்டார். இருவரும் அந்தச் சிறு குடையின்கீழ் ஒட்டி நின்றுகொண்டார்கள்.
மழையைப்போல் மனிதர்களும் அழகுதான்!
குறைவாக நீர் உள்ள இடத்தில் நின்று இரு மான்கள் தண்ணீர் குடிக்க நேர்ந்த போது ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும் , பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் வெறுமனே வாயை மட்டும் நீரில் வைத்துக் கொண்டு நின்று இறந்துவிட்ட கதையை எங்கள் தமிழ் ஆசிரியர் மாணிக்கம் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது…