இந்தக் காலை இப்படித் தொடங்குகிறது

அலுவலகச் சிற்றுந்து காலை 7:50க்கு எங்கள் பகுதிக்கு வரவேண்டும். நான் அதற்கேற்பத் திட்டமிட்டுத் தயாராகி 7:47க்கு அங்கு வந்தேன்.

ஆனால், 7:55 ஆகியும் வண்டி வரவில்லை. ஓட்டுநரைத் தொலைபேசியில் அழைத்து அவர் ஏதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டாரா, வண்டி வருவதற்கு இன்னும் நேரமாகுமா என்று கேட்டேன். ‘அல்ரெடி உங்க ஏரியாவைக் கிராஸ் பண்ணியாச்சு சார்’ என்றார் சிறிதும் வருத்தமின்றி.

எனக்கு மிகப் பெரிய எரிச்சல். அதெப்படி என்னை விட்டுவிட்டுப் போகலாம் என்று கேட்டேன். ‘7:48க்குதான் சார் உங்க பஸ் ஸ்டாப்பைக் கிராஸ் பண்ணேன், நீங்க அங்க இல்லை’ என்று ஒரு பொய்யையும் சொன்னார்.

நான் நேரந்தவறாமையைப் பின்பற்றுகிறவன். ஆனால், 100% துல்லியம் இருக்காது. பிழை செய்வதுண்டு, அந்தப் பிழையின் தண்டனையைச் சிறிதும் வருத்தமின்றி ஏற்றுக்கொள்வேன்.

ஆனால், இன்று நான் பிழை செய்யவில்லை.7:47க்கு அங்கு வந்துவிட்டேன். அது எனக்கு உறுதியாகத் தெரியும். ஏனெனில், அங்கு வந்ததும் செல்ஃபோனில் நேரம் பார்த்தேன், அது என்னுடைய அன்றாடப் பழக்கம்.

அதனால், இந்த ஓட்டுநர் 7:47க்குமுன்னால் அங்கு வந்திருக்கிறார். அப்படி முன்னதாக வந்தாலும் 7:50வரை காத்திருக்கவேண்டியது அவருடைய வேலை. அதற்குப் பொறுமையில்லாமல் வண்டியை விரட்டியிருக்கிறார். அதை மறைக்க இப்படிப் பொய் சொல்கிறார். செய்யாத பிழைக்கு நான் பொறுப்பேற்கமுடியாது.

இனி என்ன செய்ய? காச்மூச்சென்று ஃபோனில் கத்தினேன், ஓட்டுநருடைய அலுவலருக்குச் சூடாக ஒரு வாட்ஸாப் செய்தி அனுப்பினேன், அதில் ஓட்டுநர்மீதான எரிச்சலுடன் சொற்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன். முறைப்படி மின்னஞ்சலில் புகார் செய்யப்போகிறேன், இதோ இந்தக் கட்டுரையையும் எழுதியபிறகுதான் கொஞ்சம் மனம் நிறைகிறது.

யோசித்துப்பார்த்தால், அந்த ஓட்டுநர் தன்னுடைய தவற்றை உணர்ந்து ஒரு சொல்லில் மன்னிப்புக் கேட்டிருந்தால் நான் இந்த அளவு சினம் கொண்டிருக்கமாட்டேன். தான் செய்தது சரி என்பதுபோல் அவர் பேசியதுதான் எனக்குக் கடுப்பு.

ஆனால், இதனால் நான் பெற்றதைவிட இழந்ததுதான் மிகுதி. சுமார் 45 நிமிட எரிச்சல், பதற்றம், சினம், அழுத்தம். வழக்கமாக அலுவலகம் வரும் வழியில் 10 பக்கங்களாவது படிப்பேன், இன்று ஒரு சொல்கூடப் படிக்கவில்லை. அலுவலகத்தில் பல முக்கிய வேலைகள் காத்திருக்கின்றன, ஒவ்வொன்றாக எடுத்துச் செய்கிற வழக்கமான சுறுசுறுப்பு மனநிலை இல்லை. நடந்ததையே நினைத்து நினைத்து எரிச்சலடைகிறேன். இயல்புக்கு வர இன்னும் நேரமாகும்.

அதைவிட முக்கியம், இதுபோன்ற சிறிய விஷயங்களில்கூட அகிம்சையை(குறைந்தபட்சம் பொறுமையை)ப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் நான் காந்தியைப் படித்து என்ன பயன்! அவருடைய பண்புக்கு நாள்தோறும் இதுபோல் எத்தனைச் சிறுமைகளைப் பார்த்திருப்பார்! ஒவ்வொன்றுக்கும் பொங்கிக்கொண்டா இருந்தார்?

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published.