இணையத்தில் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் நம்மைத் தொடர்ந்து தங்களிடம் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதற்காக Bottomless Feed எனப்படும் முடிவற்ற ஓடையை வழங்குகின்றன. முடிவில்லாத ஓர் உணவு மேசையைப்போல் தகவல்கள், கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள் என்று மேலும் மேலும் விஷயங்களை வழங்கி நம்மை உட்காரவைக்கிறார்கள், நாமும் யோசிக்காமல் Scroll செய்துகொண்டிருக்கிறோம். இதற்கு நாள்தோறும் நாம் செலவிடும் நேரத்தை யோசித்துப்பார்த்தால் பகீர் என்றிருக்கும். யாரும் யோசிப்பதில்லை என்பதுதான் இந்தத் தளங்களின் வெற்றி.
புகை பிடிக்கிற ஒருவர் தன்னுடைய சிகரெட் எண்ணிக்கையைக் காலிப் பெட்டிகளை வைத்து அல்லது செலவாகும் பணத்தை வைத்துக் கணக்கிடலாம். என்றாவது அதை எண்ணி அவர் மாற வாய்ப்புண்டு. ஆனால் இந்தச் சமூக ஊடக Scroll Timeஐ நாம் கணக்கிடுவதும் இல்லை, கணக்கிட வழியும் இல்லை, அதனால் மாற்றத்துக்கான வாய்ப்பும் குறைவு.
சமூக ஊடகங்கள் கூடாது என்றில்லை. அங்கு பலப்பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், பசித்துப் புசிப்பதுபோல் இல்லாமல் எந்நேரமும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதுபோல் அது ஆகிவிடக்கூடாது, Mindless/Useless Browsingக்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதுதான் நாம் முதன்மையாக எண்ணவேண்டியது.
என்ன செய்யலாம்?
பழக்கங்களை உருவாக்கிக்கொள்வதுபற்றிப் (Habit Formation) பேசும் வல்லுனர்கள் ஒரு தீய பழக்கத்தை நீக்குவதைவிட (Removing) அந்த இடத்தில் ஒரு நல்ல பழக்கத்தை வைப்பது (Replacing) எளிது என்கிறார்கள். சமூக ஊடக மேய்தலையும் அந்த வழியில் நாம் வெல்ல முயலலாம். அதாவது, அந்த இடத்தில் வேறு விஷயங்களைச் செய்யவேண்டும். கட்டுரைகள், புத்தகங்கள் படிக்கலாம், இசை கேட்கலாம், நடக்கலாம், நீச்சல் அடிக்கலாம், விளையாடலாம், நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் செலவிடலாம், சமைக்கலாம், தோட்ட வேலை செய்யலாம்…
எடுத்துக்காட்டாக, நான் Refind என்ற மின்னஞ்சல் செய்திமடலைப் (Newsletter) பின்பற்றுகிறேன் (Link). இவர்கள் நம்முடைய ஆர்வங்களை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ற ஏழு கட்டுரைகளை நாள்தோறும் அனுப்பிவைக்கிறார்கள். அதில் நாம் எதைக் கிளிக் செய்கிறோம் என்பதைப் பார்த்து இந்தப் பரிந்துரைகளை இன்னும் மேம்படுத்துகிறார்கள். சிறந்த பல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. இவற்றை ஓரிடத்தில் தொகுத்துவைத்துக்கொண்டால் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஃபேஸ்புக்கை மேயாமல் இவற்றைப் படிக்கலாம்.
என்னுடைய நண்பர் ஒருவர் ஓய்வு கிடைக்கும்போது தன்னுடைய செல்பேசியில் உள்ள Contacts (தொடர்பு நபர்கள்) பட்டியலை அலசுவார். அதில் யாருடன் பேசி நெடுநாட்களாகிவிட்டது என்று யோசித்து அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விசாரிப்பார். ‘ஒரு வரி, இரண்டு வரி போதும், பெரும்பாலும் அது ஒரு தொலைபேசி அழைப்புக்கு வழி வகுக்கும், உறவு வளரும்’ என்கிறார்.
இன்னும் சிலர் கையோடு ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓவியம் வரைகிறார்கள், வண்ணம் தீட்டுகிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், நெடுநாள் திட்டம் ஒன்றை 1% நகர்த்தும்வண்ணம் சிந்தித்துக் குறிப்பெடுக்கிறார்கள், இப்படி இன்னும் பல யோசனைகள் உள்ளன. நமக்கு எது பொருந்துமோ அதைச் செய்யலாம்.
சுருக்கமாகச் சொன்னால், ‘ஐந்து நிமிடம் இருக்கிறது. ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்ற குழப்பம் நமக்கு வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால் இலக்கற்ற மேய்தலுக்குத் திரும்பிவிடுவோம்.