(துளசிதாசருடைய ‘ஶ்ரீ ஹனுமான் சாலீஸா’ நூலைத் தழுவியது)
காப்பு
காப்பு
குருவடியாம் மகரந்தம் கொண்டென்றன் மனமென்னும்
கருவமிகு ஆடிதனைக் கழுவித்தூய்(து) ஆக்குகின்றேன்,
பெருவரமாம் அறம்,பொருள்கள், பேரின்பம், வீடுதரும்
அரும்பொருளாம் ராமரவர் அரியபுகழ் உரைக்கின்றேன்.
*
காற்றரசன் பெரும்புதல்வா, கடையவனிவன் நினைக்கின்றேன்,
ஆற்றலிலேன், அறிவிலிநான், அறிவீர்நீர், அருள்பொழிந்து
தேற்றிடுவீர், உள்ளத்துள் திடஞ்சேர்த்துக் கவலைகள்
மாற்றிடுவீர், மருந்துக்கா மலைகொணர்ந்த தோள்வீரா.
1
வெற்றிவளர் சுந்தரரே, வேறெவரும் காணாத
நற்குணங்கள், ஞானத்தில் நளிர்கடலாப் பெருகுகின்றோய்,
கொற்றமுள வானரர்க்குக் கோனாவோய், மூவுலகும்
சுற்றிவந்து மிளிர்புகழோய், சோர்வில்லோய், நீவாழி!
2
ராகவனின் தூதாக ரகுகுலத்தைக் காத்துநின்றோய்,
வேகத்தில், பெரும்பலத்தில் விஞ்சவுனை ஆருண்டு?
மாகமெனப் புகழ்பரவும் மதிமிகுந்தோய், அஞ்சனைசேய்,
நாகமதை ஏந்திவந்தோய், நலம்பரப்பும் கால்மைந்தா.
3
பெருவீரா, அளவற்ற பெருஞ்செயல்கள் புரிகின்றோய்,
அருவயிரம் அன்னவலு அமைந்தகுரு, தொழுமனத்துக்
கருமைகள் நீக்கியதில் கவின்கூட்டி உதவுகின்றோய்,
தருமத்தின் உருவென்று தவர்போற்றும் செவ்வடியோய்.
4
பொன்னிறத்துத் திருமேனி, பொலிகாதில் குண்டலங்கள்,
அன்பரவர் பணிவதுபோல் அழகாகச் சுருள்கேசம்,
மன்னவுன்றன் எழில்கண்டு மயங்கிடுவார் மாந்தரெல்லாம்,
தன்முடியைத் தம்பிக்காத் தந்தவனின் பெருந்தோழா.
5
திருக்கரத்தில் வஜ்ராயுதம், திகழ்கொடியை ஏந்தியுள்ளோய்,
திருமகளின் சிறைவாசம் தீர்த்துவைத்த அருவீரா,
பொருப்பன்ன தோள்மீது புரிநூலை அணிந்துள்ளோய்,
வருத்தங்கள் தீர்க்கின்றோய் வணங்குபவர்க்(கு) உள்ளிருந்து.
6
பனிமலையாள் அரனாகப் பத்தர்குறை போக்கிவந்தீர்,
தனிவீரன், கோசலத்துத் தயரதனின் மகனாகக்
கனிவாய்மால் பிறக்குங்கால் கவியானீர், கேசரியின்
நனிமைந்தா, ஒளி,வலியில் நன்குயர்ந்தீர் புவிவணங்க.
7
கடலன்ன அறிவுடையோய், கண்டவரார் அதனாழம்?
குடநிறைந்த நிலையென்னக் குணம்பெருகி நிற்கின்றோய்,
நடத்துகிறோய் எப்பணியும் நனிசிறப்போ(டு), அருங்கானம்
நடந்தோனுக்(கு) ஆட்செய்ய நாடிவரும் கவிப்பெரும!
8
தாசரதி குணங்கேட்டல், தனிப்பெரியோய், உனக்குவப்பு,
பாசநிறை நின்னிதயம் பகவானின் குடியிருப்பு,
வாசமலர் உறைமகளும் வழிநடந்த உடன்பிறப்பும்
நேசமொடு உனிலுள்ளார், நீருள்ளீர் அவர்மனத்தே.
9
அன்னையவள் கண்டிடவே அணுவளவா நிற்கின்றீர்,
வன்னெஞ்சத்(து) அரக்கருக்கோ வானுயர்ந்து வளருகின்றீர்,
புன்மைதனில் நாள்தோறும் புரண்டோர்தம் திமிர்வீழத்
தொன்னகரில் தீவைத்தீர், துவண்டதுகாண் தீயகுலம்.
10
போர்செய்ய வந்தவர்தம் புறமுதுகில் சிலிர்ப்பெழவே
சீர்மிகுந்த பெருவடிவாச் சிரிக்கின்றீர், அவர்கூட்டம்
வேர்கூட எஞ்சாமல் வெட்டுகின்றீர், வில்லேந்தும்
கார்முகிலின் பணியாவும் கணப்பொழுதில் செய்கின்றீர்.
11
தம்பியவன் துவண்டுவிழ, தனிமுதல்வன் மயங்கிடவும்
இம்மென்னும் நொடிப்பொழுதில் எடுத்துவந்தீர் பெருமலையை,
அம்மலையின் காற்றாலே அடிபட்டோன் உயிர்த்தெழவும்
நம்பெருமான் உமையணைத்தார், நானிலமும் உமைப்பணிய.
12
பரதனன்ன சோதரனாய்ப் பரந்தாமன் உமைப்புகழ,
வரதனவன் பத்தரெல்லாம் வாஞ்சையொடு உமைப்பரவ,
குரங்கினத்துப் பேரறிஞா, குரைகடலைத் தாண்டிவந்தோய்,
இரக்கமொடு எமக்கருள்வோய், என்றென்றும் வாழ்கின்றோய்.
13
ஆயிரம்நா படைத்தோனுன் அரும்புகழைப் பாடுவகை
ஆயிரம்பேர் கொண்டோரும் அருளினராம், இலங்கைதனைத்
தீயிருத்தி உடனழித்தோய், திருமகள்கோன் தழுவுகுரு,
கோயிலெனப் பரனமரும் குளிர்மார்பா, பெருங்குணத்தோய்.
14
சனகாதி முனிவர்களும், சகம்படைத்த பிரமனொடு
இனமாகும் தேவர்களும், எப்பொழுதும் அரிபெயரை
மனத்திருத்தும் நாரதரும், மலரமர்ந்த கலைமகளும்,
வனம்நடந்து பகைகெடுத்த வரதனது அணையாரும்,
15
எமனவனும், குபேரனும், இனும்பலரும், கவிஞர்களும்,
தமக்கிணையில் அறிஞர்களும், தத்துவங்கள் அறிந்தோரும்
உமைப்பரவித் தோற்றிடுவார், உரைக்கவல்லார் நின்புகழை,
எமைக்காக்கும் நல்வீரா, எல்லையிலாப் பெருமையுளோய்.
16
அரசாட்சி தந்துவனம் அழகுபெற நடந்துவந்த
சுரர்போற்றும் கோமானைச் சுக்ரீவன் நட்பாக்கி,
அரசாட்சி இழந்துவனத்(து) அங்குமிங்கும் திரிந்துவந்த
குரங்கினத்தார் இளவரசின் குறைதீர்த்தீர், வேந்தாக்கி.
17
நீர்கடந்த கடல்சூழ்ந்த நீர்மையிலார் நன்னகரில்
நீர்போலே உளத்தன்பு நிலைத்தவனாம் வீடணற்குக்
கூர்மதியால் வழிசொன்னீர், கொற்றவனாச் செய்துவிட்டீர்,
பார்முழுதும் இவையறியும், பலங்கொண்டோய், உமைப்பணியும்.
18
சுட்டெரிக்கும் தொலைதூரச் சூரியனைப் பழமென்று
கிட்டவந்தீர் எடுத்துண்ண, கேசரியார் கொஞ்சுபழம்,
வட்டமுகக் கதிரவனும் வாடினனாம், மேகமெனும்
பட்டாடைத் திரைக்குப்பின் பதற்றமுடன் ஒளிந்தனனாம்.
19
கணையாழி கொண்டுபகை காய்கின்றோர் வழங்குமொரு
கணையாழி கொண்டுபெரும் கடல்கடந்தீர், வியப்பென்ன?
இணையில்லார், கோசலைதன் எழில்மகனார் பெயரொன்றே
துணையாக ஏற்கின்றோய், தூய்மனத்தோய், புகழ்நிறைந்தோய்.
20
உலகத்தால் இயலாத உயர்பணிகள் பலவுண்டு,
அலகில்லா விளையாட்டார் அவர்தொண்டா, நினையெண்ணக்
கலக்கமிலை, தெளிவாகும், கைத்தொழில்கள் எளிதாகும்,
பலஞ்சேரும், செயலாகும், பகைதீரும், வளங்கூடும்.
21
கோசலத்துக் கொற்றவனின் கொடிவாயில் அமர்ந்திருக்கும்
மாசற்ற பெருமனத்தோய், மலர்க்கரத்தோய், ராகவனின்
தாசனுன்றன் அருளன்றி தாசரதி அருளேது?
வாசஞ்செய்(து) எம்மனத்தில் வனப்பாக்க வந்தமர்வாய்.
22
நின்னடிகள் சேர்பவர்க்கு நிரந்தரமாம் பெருமகிழ்ச்சி,
பொன்னிறத்துச் செயல்வீரா, பொருகடலைக் கடந்துவென்றோய்,
உன்காவற் குடையிருக்க உலகிலெமக்(கு) என்னகுறை?
மின்னலைவெல் விரைவுடையோய், மேன்மைமிகு நல்லறிஞா.
23
பேரொளியாய்த் திகழ்கின்றோய், பெருவீரா, இவ்வொளியை
ஆரொருவர் தாங்கவல்லார்? அஞ்சனைசேய், ஹூம்மென்று
நீரொருக்கால் கர்ஜித்தால் நிலங்களெல்லாம் நடுங்குதய்யா,
காரொழுகும் கடல்சூழ்ந்த கடிநகரின் கனங்குறைத்தோய்.
24
நின்பெயரைச் சொல்மனத்தில், நிறைவீரா, நிம்மதியோ(டு)
அன்பாற்றல், வளம்வளரும், ஆட்டிவைக்கும் தீமையெல்லாம்
உன்னடியார் எமைநெருங்க ஒண்ணாமல் நடுநடுங்கிப்
பின்வாங்கி ஓடிவிடும், பெருவெற்றி தேடிவரும்.
25
வீரமிகு சுந்தர,நின் வெற்றிநிறை திருப்பெயரை
ஆரமெனக் கோத்துதினம் அணிநாவர் அவர்க்கெல்லாம்
பாரமில்லை, கவலையில்லை, பழவினையின் சுமையில்லை,
மாரனைவெல் அழகுடையீர், மாரனைவெல் வலிமையுளீர்.
26
மனம்,செயல்,சொல் மூன்றாலும், மதிநிறைந்தீர் உம்பெருமை
அனவரதம் நினைப்பவரின் அருந்துயர்கள் அறுக்கின்றீர்,
சினங்கொண்டு தீவொன்றைச் செந்தழலில் நனைத்துவிட்டீர்,
வனம்நடந்த வனப்புடையான், வைதேகி அருள்பெற்றீர்.
27
மேலான பரம்பொருளாம், மிகச்சிறந்த தவசீலர்,
கோலாட்சி தம்பிக்குக் கொடுத்தவரின் குறிப்புணர்ந்து
மாலாரின் பணியெல்லாம் மாண்புடனே செய்கின்றீர்,
சேலாடும் அனைகரத்தால் சிரஞ்சீவி வரம்பெற்றீர்.
28
குணக்கடலாம் நினைப்பணிவார் கோரிக்கை அத்தனையும்
வணங்குசிரம் நிமிருமுன்னர் வழங்கிடுவோய், அவர்மகிழக்
கணக்கில்லாப் பலன்பலவும் கருணையுடன் அளிக்கின்றோய்,
பணங்கொண்ட அணையுடையார் பதம்போற்றும் நற்றொண்டீர்.
29
வீரத்தில் எல்லையிலோய், விரிகின்ற யுகந்தோறும்,
சீரத்தா, நின்பெருமை சிறப்பாகப் பரவுதுகாண்,
கூரம்பு கொண்டரக்கர் குலமொழித்தார் அணைதோழா,
ஆரமுதா, புகழொளியாய் அனைத்துலகும் நிறைந்திருப்போய்.
30
தயரதன்சேய் பேரன்பைத் தன்னுரிமை கொண்டகவி,
உயர்ந்தவரை, நல்லோரை ஒருகுறையும் நெருங்காமல்
பயம்நீக்கிக் காக்கின்றோய், பவஞ்செய்யும் அசுரருக்குத்
துயர்தந்து அழிக்கின்றோய், தூதனெனக் கடல்கடந்தோய்.
31
தண்மலையைத் தூக்கிவந்து தம்பியவன் உயிர்காத்தோய்,
எண்ணத்தில் எட்டாத இயல்புடையோய், அனைவர்க்கும்
எண்ணாற்றல், நவநிதிகள் ஈகின்றோய், திருமகளாம்
பெண்ணரசி நினக்களித்த பெருவரத்தின் சிறப்பதுவாம்.
32
உத்தமராம் மால்பெயரோ உள்ளத்தில் மகிழ்வலையாய்ச்
சத்தமிடக் கொண்டாடிச் சகமுழுதும் திரிகின்றீர்,
சித்தமதில் கார்மேகச் செவ்வாயர் பதந்தாங்கி
நித்தமவர் அடியனென்று நிலைக்கின்றீர், நெகிழ்கின்றீர்.
33
நினைவணங்கும் அடியரவர் நிமலனடி சேர்ந்திடுவர்,
நினைத்திடவும் அரியபல நெடும்பிறவி சேர்த்தபல
வினைசகலம் தீர்த்திடுவர், விரும்புபதம் பெற்றிடுவர்,
கனைகடலைத் தாண்டிவந்த காகுத்தன் மகிழ்தோழா.
34
அஞ்சனைசேய் நின்பத்தர் அரிபத்தர் ஆகின்றார்,
அஞ்சேலென்(று) அருள்கின்ற அரும்பதத்தைச் சேர்கின்றார்,
தஞ்சமென வந்தவரைத் தார்வேந்தர் ஆக்குகிற
அஞ்சிலொன்றின் அருமைந்தா, ஐம்புலன்கள் வென்றமுனி.
35
அறவழியில் நிற்கின்ற அனுமனுன்றன் துணையிருக்கப்
பிறதெய்வம் வணங்குகின்ற பேச்சேது எம்மனத்தில்,
சிறப்புநிறை பெரியோயுன் சீர்கழல்கள் வணங்குமுளம்
திறந்திருக்கும், சுகமனைத்தில் திளைத்திருக்கும், மகிழ்ந்திருக்கும்.
36
பெருவீரா, நின்கழலைப் பித்தேறிப் பிடிப்பவரை
நெருங்காது துன்பங்கள், நினையெண்ணும் பத்தரவர்
அருந்துயரம் அழிந்துவிடும், அகத்துள்ளே நிறைவுவரும்,
தருவரத்தில் வள்ளலெனத் தழைக்கின்றோய் எம்மனத்தில்.
37
அருட்கடலே, ராமனவர் அருந்தூதா, போற்றுகிறோம்,
பெருங்கருணைக் குருவன்ன பேறருள்வீர், போற்றுகிறோம்,
தருவனத்துத் தவவுருவின் தாள்பணிந்தீர், போற்றுகிறோம்,
கருங்கடலைக் கடந்துவந்த கற்றோளாய், போற்றுகிறோம்.
38
மாருதியின் புகழ்சொல்லும் மாண்புமிகு பாவுரைப்பார்
கோருவரம் உடன்கிட்டும், கொடும்பந்தம் அறுந்துவிடும்,
ஆருமிணை இல்லாத அனுமனவர் பெருமைசொலச்
சேருமுயர் ஆனந்தம், செப்பிடுவோம் நாள்தோறும்.
39
மருந்துமலை கொணர்ந்தயெங்கள் மாருதியின் புகழ்பாடும்
அரும்பாக்கள் சொல்லுகின்ற அன்பர்கள் அனைவருக்கும்
விரும்புவரம் தினம்கிட்டும், வெற்றியென்றும் அருகிருக்கும்,
கருங்கழுத்து ஈஸ்வரனார் கௌரிசங்கர் இதன்சான்று.
40
எழுமரங்கள் தொளைத்தவராம் எழிற்பாதர் அடைக்கலமென்(று)
ஒழுகுகின்ற எம்மிதயம் உறைவிடமாக் கொளவாரீர்,
கொழுமணிசேர் இழையுடையாள், கோதண்டம் கரத்துடையார்,
தொழுதுபணி புரிதம்பி, தூயவர்நீர் நிரந்தரமா.
நிறைவு
தேவர்கோன், கால்மைந்தா, தீவினைகள் தீர்க்கின்றீர்,
ஆவதெலாம் நன்மையென அகத்திருக்கும் நன்னலத்தோய்,
தீவதனில் தவமிருந்தாள், திருமாலார், அவர்தம்பி
மூவருடன் எம்மிதயம் முழுவதிலும் நிறைந்திருப்பீர்.
(2018)
அருமை