ஹருகி முரகாமி எழுதிய ‘How I write my novels‘ என்ற கட்டுரையைப் படித்தேன். அவர் தன்னுடைய நாவல்களுக்கு எப்படித் திட்டமிடுகிறார், ஒவ்வொரு கட்டத்திலும் என்ன செய்கிறார், என்ன செய்வதில்லை என்று ஓர் அழகான Blueprint கொடுத்திருக்கிறார். அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது நான் எடுத்த குறிப்புகளை என்னுடைய Nonfiction எழுத்துப் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கான வாட்ஸாப் குழுமத்தில் பகிர்ந்துகொண்டேன். அதை இப்போது பொதுவிலும் வெளியிடுகிறேன்.
(குறிப்பு: படிக்கும் வசதிக்கென இதை ஹருகி முரகாமியே சொல்வதுபோல் தன்மையில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் இவற்றை இதே சொற்களில் சொல்லவில்லை (not as is). அவர் வெவ்வேறு சொற்களில் விரிவாகச் சொன்னதன் சுருக்கத்தை என் சொற்களில் குறிப்பிட்டுள்ளேன்.)
1. என் மேசையைத் தூய்மைப்படுத்துகிறேன். அதாவது, அடுத்து எழுதப்போகும் நாவலைத்தவிர வேறு எந்தப் படைப்புப் பணியையும் ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிடுகிறேன்.
2. எழுதுகிறேன். ஆறு மாதங்களுக்கு நாள்தோறும் 10 பக்கங்கள். நான் மிக ஊக்கத்துடன் எழுதுகிற நாட்களிலும் 10 பக்கம்தான், அதற்குமேல் எழுதமாட்டேன். எழுத வராத நாட்களிலும் 10 பக்கம்தான், அதற்குக்கீழ் எழுதமாட்டேன். பெரிய பணிகளைச் செய்யும்போது ஏற்ற இறக்கங்கள் கூடாது, நிலைத்தன்மை வேண்டும். ஆறு மாதங்களில் 1800 பக்கங்கள் எழுதிவிடவேண்டும்.
3. ஆறு மாதங்களுக்குப்பின்: முதல் வரைவு (First Draft) தயார்
4. ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் (சுமார் ஒரு வாரம்)
5. முதல் மறுஎழுத்து (Rewrite). சுமார் ஒரு மாதத்திலிருந்து இரண்டு மாதம்வரை. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை படித்து, திருத்துகிறேன். முன்பு தொடர்ச்சியாக எழுதியபோது அதில் ஒழுங்கற்ற பல பகுதிகள் உருவாகியிருக்கும். அவை ஒன்றோடொன்று பொருந்தாமல் இருக்கும். அவற்றையெல்லாம் சரி செய்கிறேன். இந்த நேரத்தில் நான் பல பகுதிகளை முழுக்க வெட்டுவேன், புதிதாகவும் எழுதிச் சேர்ப்பேன். முழு நாவலும் தொடர்ச்சியான நல்லோட்டத்துடன் இருக்கவேண்டும்.
6. ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் (சுமார் ஒரு வாரம்)
7. இரண்டாவது மறுஎழுத்து. நேரம் குறிப்பிடப்படவில்லை. இந்தமுறை நான் நாவலின் தகவல்களில் கவனம் செலுத்துகிறேன், அவற்றை மாற்றி இயல்பாக்குகிறேன். மற்றபடி, பெரிய அறுவைச் சிகிச்சைகளைச் செய்வதில்லை.
8. ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் (சுமார் ஒரு வாரம்)
9. மூன்றாவது மறுஎழுத்து. நேரம் குறிப்பிடப்படவில்லை. இந்தமுறை நான் நாவலில் ஏதாவது பகுதிகள் தளர்ந்துள்ளனவா அல்லது மிக இறுக்கமாக உள்ளனவா என்று பார்த்துத் திருகாணிகளை முடுக்குகிறேன் அல்லது தளர்த்துகிறேன். சில நேரங்களில் வேண்டுமென்றே தளர்வை, இறுக்கத்தை அனுமதிப்பதும் உண்டு.
10. ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் (சுமார் 2 வாரங்களிலிருந்து ஒரு மாதம்)
11. நிறைவாக, விரிவாக ஒருமுறை நாவலைப் படிக்கிறேன், திருத்தி எழுதுகிறேன். மேற்சொன்ன நீண்ட இடைவெளியில் என்னுடைய மனநிலை சற்று மாறியிருக்கலாம். அது நாவலில் அதற்குமுன் நான் சிந்திக்காத சில மாற்றங்களைக் கொண்டுவரலாம்.
12. என்னுடைய முதல் வாசகரிடம் நாவலைப் படிக்கக் கொடுக்கிறேன்.
பின்குறிப்புகள்:
1. முழுக் கட்டுரையைப் படிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள்
2. இந்தக் கட்டுரை ஹருகி முரகாமி எழுதிய ‘Novelist as a Vocation‘ என்ற நூலின் ஓர் அத்தியாயம்தான். அந்த நூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்
3. என்னுடைய அக்டோபர் மாத Nonfiction வகுப்பு வரும் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறும். கலந்துகொள்ள விரும்புவோர் 8050949676 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் அனுப்புங்கள். ஆன்லைன் வகுப்பு நேரம், கட்டணம், பணம் செலுத்தும் முறை உள்ளிட்ட தகவல்கள் வந்து சேரும்