இன்று காலை எங்களுடைய நான்ஃபிக்ஷன் எழுத்துப் பயிற்சிக் குழுவில் சண்முக சுந்தர் என்ற நண்பர் இப்படிக் கேட்டிருந்தார்:
எழுதும்போது நொறுக்குத்தீனி சாப்பிடுகிற பழக்கம் உங்களுக்கு உண்டா? நான் எழுதுகிற சாக்கில் நிறையச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படுகிறேன். இதைக் குறைக்க ஏதேனும் யோசனைகள் சொல்லுங்கள்.
மிகச் சுவையான கேள்வி இது. ஆனால், இதற்கு என்னுடைய பதில் கொஞ்சம் லட்சியவாதம் கொண்டது.
நான் நன்கு சாப்பிடுகிறவன், ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறவன். நல்ல உணவகத்தைத் தேடிச் சில நூறு கிலோமீட்டர்கள் சென்ற அனுபவம்கூட உண்டு. ‘சோறு முக்கியம்’ என்ற தலைப்பில் பல சாப்பாட்டு ரசனைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், என்னுடைய இன்னொரு பேரார்வமாகிய (Passion) எழுத்துடன் சாப்பாட்டை இணைக்கத்தோன்றியதில்லை. அதற்குக் காரணம் கொஞ்சம் எதார்த்தமானது: எழுதும்போது கைகள் இரண்டும் விசைப்பலகையில் இயங்கவேண்டும், சாப்பாட்டை எடுக்கக் கை திரும்பும்போது அந்த ஓட்டம் தடைப்படும்.
அதனால் எழுத்து மேசையில் எப்போதும் சாப்பாடு, நொறுக்குத்தீனிகள் இருக்காது. ஒருவேளை வீட்டில் யாராவது கொண்டுவந்து கொடுத்தாலும் சற்றுத் தொலைவில் வைக்கச்சொல்லிவிடுவேன். அந்தச் சிறு சிரமம் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கும்.
இரண்டாவது எதார்த்தமான காரணம், நான் கணினியில் எழுதுவதால், சிறு உணவுத் துணுக்குகள் விசைப்பலகையில் (கீபோர்டில்) உள்ள விசைகளுக்கிடையில் சிக்கிக்கொள்ளக்கூடும். அது எனக்குப் பிடிக்காது. விசைப்பலகை/கணினிக்கும் அது நல்லதில்லை.
மூன்றாவதாக, பெரும்பாலான நொறுக்குத்தீனிகளில் எண்ணெய் நிறைந்திருப்பதால் அந்தப் பிசுக்கு கையில் ஒட்டிக்கொள்ளும். எனக்கு எழுதும்போதும் விரல்கள் மிகத் தூய்மையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒரு மனத்தடை வந்துவிடும்.
நான்காவது காரணம், அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, எனக்கு உட்கார்ந்து செய்கிற வேலைதான் என்பதால், வேலை செய்யும்போது நொறுக்குத்தீனிப் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்வது மிகப் பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கக்கூடும். இதனாலும் நான் அவற்றைப் பிரிக்கப் பழகிக்கொண்டேன்.
அப்படியானால், நான் எழுதும்போது ஏதும் நொறுக்குத்தீனி சாப்பிடுவதே இல்லையா?
உண்டு. ஆனால் “எழுதும்போது” இல்லை, “எழுத்தின் இடையில்”. கணினியை மூடிவைத்துவிட்டுச் சென்று நொறுக்குத்தீனியை நொறுக்குவேன். பின்னர் திரும்பி வந்து எழுத்தைத் தொடர்வேன். வேறு எதுவும் எனக்குச் சரிப்படுவதில்லை.