சிறுவயதில் நான் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்வதற்கு இரண்டு மாதங்களும் ஒரு மணி நேரமும் ஆயின.
உண்மையில் அதற்கு ஒரு மணிநேரம்தான் ஆனது. அதற்குமுன் இரண்டு மாதங்கள் சைக்கிள் விடுகிறேன் பேர்வழி என்று ஏமாற்றிக்கொண்டிருந்தேன். எனக்கு அதில் பெரிய அக்கறையோ ஆர்வமோ இல்லாததால் மிக மெதுவாகத்தான் கற்றுக்கொண்டேன், அல்லது, கற்றுக்கொள்ளாமல் இருந்தேன்.
என்னுடைய தந்தை சொக்கநாதன் (என்னுடைய புனைபெயரில் இருப்பவர்) எதையும் மிக உடனடியாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிறவர். அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொன்னால் நாம் அந்தச் சொற்றொடருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குள் செருப்பை மாட்டிக்கொண்டு அதைச் செய்யப் புறப்பட்டுவிடுவார்.
அப்படிப்பட்டவர் என்னுடைய மெதுவான மிதிவண்டிப் பயிற்சித் திட்டத்தை ஆதரிப்பாரா? ‘என்ன? கத்துக்கிட்டியா இல்லையா?’ என்று அவ்வப்போது அதட்டிக்கொண்டே இருந்தார். நானும் எதையோ சொல்லிச் சமாளித்தேன்.
ஒருநாள், அவருடைய பொறுமை தீர்ந்துவிட்டது. என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு தெருவுக்குச் சென்றார், மிதிவண்டியின்மீது ஏற்றினார், அத்தனை வாரச் சினத்தையும் பின் கேரியரில் உட்காரவைத்துக் கற்றுத்தரத் தொடங்கினார்.
அடுத்த ஒரு மணி நேரம் நான் அவரிடம் வாங்கிய அடியும் உதையும் மத்தளம்கூட வாங்கியிருக்காது. நான் கீழே விழுந்ததையோ எனக்குக் கைகளில், கால்களில் சிராய்ப்புக் காயங்கள் உண்டானதையோ என் தந்தை கண்டுகொள்ளவே இல்லை, ஓட்டு, ஓட்டு, ஓட்டு, நேரா நில்லு, ஒழுங்காப் பிடி, மிதி, அழுத்து என்று கட்டளைச்சொற்களால்மட்டும்தான் அவர் பேசினார். ஒரு மணிநேரத்தின் முடிவில் நான் நன்கு மிதிவண்டி ஓட்டப் பழகியிருந்தேன்.
என் தந்தை எனக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்ததை ஊரே உச்சுக்கொட்டிக்கொண்டு பார்த்தது. அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு அந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி என்னிடம் வருத்தம் தெரிவித்தவர்கள் உண்டு. அவர்களில் யாரும் என் தந்தையிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கமாட்டார்கள். ஏனெனில், அவர்மீது எனக்குள்ள அச்சம் அவர்கள் எல்லாருக்கும் உண்டு.
ஒருவேளை கேட்டிருந்தாலும் அவர் சிரித்தபடி இப்படித்தான் பதில் சொல்லியிருப்பார், ‘அவன் ரெண்டு மாசத்துல ஒழுங்காச் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டிருந்தா நான் ஏன் தேவையில்லாம முதுகுல கை வைக்கப்போறேன்?’
அன்றைக்கு வாங்கிய அடி, உதையில் நான் மிதிவண்டிமட்டும் கற்றுக்கொள்ளவில்லை, சுமைக்குப் பயந்து கற்றலைத் தள்ளிப்போடக்கூடாது என்றும் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு, எந்த ஆசிரியரிடமும் நான் அடி வாங்கவில்லை, ஒரு முகச்சுளிப்பைக்கூட வாங்கவில்லை.