டெலகிராம் செயலியில் நான் நாள்தோறும் எழுதிவந்த #உயர்102 தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை நான் பல இதழ்களில் பலவிதமான தொடர்களை எழுதியுள்ளேன், அவை லட்சக்கணக்கானோரைச் சென்றுசேர்ந்துள்ளன. ஆனால், இந்தத் தொடர் தனிப்பட்டமுறையில் எனக்கு மிகுந்த நிறைவளித்தது. ஏனெனில், இதை நான் ஒரே ஒரு வாசகனுக்கென, அதாவது, எனக்கென எழுதிக்கொண்டேன்.
இதில் வருகிற எல்லாரும் என்னுடைய நாயகர்கள், தங்களுடைய சிந்தனைகள், சொற்கள், நடவடிக்கைகள், வாழ்க்கையின்மூலம் எனக்குச் சிறிய, பெரிய, மிகப் பெரிய பாடங்களைக் கற்பித்தவர்கள். அவர்களிடம் நான் எதைக் கற்றேன் (அல்லது, இனி கற்க விரும்புகிறேன்) என்பதைமட்டும்தான் இங்கு எழுதினேன். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 100 சொற்கள் என்ற கூடுதல் கட்டுப்பாட்டையும் விதித்துக்கொண்டேன்.
பெரிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் திடீரென்று தொடங்கிய தொடர்தான். ஆனால், மிக விரைவில் என்னைக் கவர்ந்து உள்ளிழுத்துவிட்டது. கடந்த 102 நாட்களாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறந்த ஆளுமைகளைப்பற்றிச் சிந்தித்து, அவர்கள் எந்தக் கோணத்தில் எனக்குப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள், எவ்வாறு என்னை நேர்விதமாகப் பாதிக்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், அவர்களுடைய பெருவாழ்க்கையின் எந்தப் புள்ளி வெளிச்சமிட்டுக் காண்பிக்கவேண்டியது, கற்றுக்கொள்ளவேண்டியது என்றெல்லாம் பலவிதமாக அலசிப் பார்த்து, நள்ளிரவு 11:59க்குள் அதை எழுதிப் பதிவுசெய்தேன். மறுகணம் அதிலிருந்து விடுபட்டு அடுத்த ஆளுமையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ந்த இந்த அனுபவம் சொற்களால் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை அளித்தது. இன்றைக்கு அனைவரையும் மொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது மிகுந்த மனநிறைவு உண்டாகிறது.
என்னுடைய இந்த #உயர்102 பட்டியல் காந்தியில் தொடங்கி இளையராஜாவில் நிறைவடைகிறது. இதில் வருகிறவர்கள்மட்டும்தான் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் பொருட்படுத்தக்கூடாதவர்கள் என்று பொருள் இல்லை. இவர்கள் என்னை வளர்த்தவர்கள், என்னை மாற்றியவர்கள், என்னை முன்னேற்றியவர்கள், இப்படி ஒரு பட்டியல் உங்களுக்கும் இருக்கும், அதை நீங்கள் எழுதவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் எழுதவேண்டும்.
இதில் வரும் எல்லாரும் உலக உத்தமர்களா?
இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அவர்கள் வாழ்க்கையின் நேர்விதமான, எதிர்மறையான பண்புகளை முழுமையாக எடைபோட்டுத் தீர்ப்புச் சொல்வது இந்தத் தொடரின் நோக்கம் இல்லை. ஒவ்வொருவரிடமும் நான் எனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டேன். அதைத்தான் இங்கு எழுதியிருக்கிறேன்.
‘என் நாயகர்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை’ என்றார் வாரன் பஃபெட். என் நாயகர்களும் அப்படித்தான், நாயகர்கள் எல்லாரும் அப்படித்தான். அவர்களால்தான் உலகம் தலைமுறைக்குத் தலைமுறை மேம்பட்டுக்கொண்டிருக்கிறது, இனியும் மேம்படும்.
***
#உயர்102 தொடரை டெலகிராம் செயலியில் படிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.