ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா?
சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவுகிற, பலரால் பரப்பப்படுகிற வைரல் பதிவுகளில்:
1. விஷயம் குறைவு. வைரலுக்குச் சுருக்கம் முக்கியம்.
2. ஏகப்பட்ட உணர்ச்சி இருந்தாலும் அறிவு குறைவு. அதாவது, அவற்றிலிருந்து நீங்கள் பெரிதாக எதையும் கற்றுக்கொள்ளமுடியாது.
3. அவை நீடித்திருப்பதில்லை. அதிகபட்சம் 2 அல்லது 3 நாள்தான் அவற்றின் வாழ்வு.
4. தொலைநோக்கில் அவற்றால் எந்த நல்ல மாற்றமும் ஏற்படுவதில்லை. அவற்றின்மூலம் நாம் துண்டுதுண்டாக இழக்கும் நேரத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால், எதிர்மறை மாற்றங்கள்தான் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் நாம் வேறு பல பயனுள்ள வேலைகளைச் செய்திருக்கலாம்.
5. சில திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட பாடலை அல்லது காட்சியை அல்லது நபரை நீக்கிவிட்டாலும் அந்தப் படத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதுபோல, இவற்றை நாம் பார்க்காமல் இருந்திருந்தாலும் எதையும் இழந்திருக்கமாட்டோம்.
யோசித்துப்பார்த்தால், வைரல் பதிவுகள் என்பவை விரைவுணவின் (Fast Food) டிஜிட்டல் வடிவம்தான். ஊட்டச்சத்துள்ள உணவும் இணையத்தில் இருக்கிறது. அது வைரல் ஆவதில்லை. நாம் அதைத் தேடிச்செல்லவேண்டியிருக்கிறது. அந்தச் சிறு தடை காரணமாக நாம் நம்முடைய நேரத்தை எளிதில் கிடைக்கிற வைரல் பதிவுகளுக்குக் கொடுத்துவிடுகிறோம்.
இந்த வலையிலிருந்து நாம் விடுபட்டு வருவது அத்தனை எளிதில்லை. ஏனெனில், ஒவ்வொரு சமூக ஊடகமும் இந்த விரைவுணவுக்கேற்பக் கவனமாகத் திட்டமிடப்படுகிறது. அவர்களுக்கு நம் நேரம் தேவை. இலவசமாக வழங்கப்படும் சேவைகளுக்கு அந்த நேரம்தான் கட்டணம்.
நான் அறிவுரை சொல்வதற்கென இந்தப் பதிவை எழுதவில்லை. நானும் அவ்வப்போது வைரல் பதிவுகளைக் கிளிக் செய்து படிக்கிறவன்தான், சிரிக்கிறவன்தான், முகம் சுளிக்கிறவன்தான். ஆனால், அதை என்னுடைய முதன்மையான இணையச் செயல்பாடாக வைத்துக்கொள்ளாமல், நல்ல பணிக்கான ஒரு பரிசுபோல் வைத்துக்கொள்வேன். அதாவது, இந்த வேலையைச் செய்தால் சிறிது நேரம் இணையத்தில் “எதையாவது” மேயலாம் என்று அனுமதித்துக்கொள்வேன்.
ஒருவேளை, அந்தக் கணக்கு எல்லை மீறிவிட்டால்?
அதுவும் நடக்கும். பரவாயில்லை. பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை, வருத்தப்படுவதில்லை. எல்லை மீறுகிறோம் என்பது தெரிந்தால் போதும், அந்தக் கவனம் நம்மை வழிநடத்தும். அது தெரியாமல் அலையில் இலைபோல மிதப்பதுதான் ஆபத்து.