இணையத்தில் வைரல் கட்டுரை(?) எழுதுவது மிக எளிது:
1. ஒரு புகழ் பெற்ற நபருடைய ட்வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். (ஒருவேளை, புகழ் பெற்றவர் கிடைக்காவிட்டால் யாருடைய ட்வீட்டை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு அவர்கள் பெயருக்குமுன்னால் “புகழ் பெற்ற நடிகர்/நடிகை/பாடகர்/வல்லுனர்” என்று எதையாவது சேர்த்துவிட்டால் போதும். அவர் எங்கு, எப்படி, எதனால் புகழ் பெற்றார் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.)
2. அந்த ட்வீட்டை திரைப்பதிவு (ஸ்க்ரீன்ஷாட்) செய்து உங்கள் கட்டுரையில் ஒட்டுங்கள்.
3. அந்த ஸ்க்ரீன்ஷாட்டுக்குமேல் தன்மையில் உள்ள அந்த ட்வீட்டை படர்க்கையில் மாற்றி எழுதுங்கள். எடுத்துக்காட்டாக, ‘நான் இன்று கடலை சாப்பிட்டேன்’ => ‘புகழ் பெற்ற நடிகர் xyz இன்று கடலை சாப்பிட்டார்’.
4. இதோடு நிறுத்தினால் கட்டுரை ருசிக்காது. ‘இந்தத் தகவலை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தான் சாப்பிட்ட கடலையின் புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார்’ என்பதுபோல் ஓரிரு வரிகளைச் சேருங்கள்.
5. அந்த ஸ்க்ரீன்ஷாட்டுக்குக்கீழ் ‘இந்தத் தகவல் நெட்டிசன்களிடையில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வைரலாகிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் அவருக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் (அல்லது, அவரைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்)’ என்று எழுதுங்கள்.
6. சூடான, சுவையான வைரல் கட்டுரை தயார். சுற்றி 360 டிகிரியிலும் வண்ணமயமான விளம்பரங்களை ஒட்டிப் பதிப்பித்துவிடுங்கள்.