இந்தியாவில் நர்சரி பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளைவிடக் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அதிகமாகிவிட்டன என்று ஊகிக்கிறேன். தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல், பேருந்து நிறுத்தங்கள், சுவர்கள், அட, மரங்களைக்கூட இவர்கள் விட்டுவைப்பதில்லை, எந்தப் பக்கம் திரும்பினாலும் கடன் விளம்பரம்தான். ‘ஒரு கிளிக் போதும், உங்கள் வாழ்க்கை மாறிவிடும்’ என்று சத்தியம் செய்கிறார்கள்.
முன்பெல்லாம் கல்வி, வீடு, கார், வீட்டு உதவிப் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்குதான் கடன் வாங்குவார்கள். ஆனால் இப்போது ‘உங்கள் கையில் நிறையப் பணம் இருப்பது நல்லது, அதற்காகக் கடன் வாங்குங்கள்’ என்கிற வகையில் இந்த விளம்பரங்கள் அதைத் திருப்பிப்போடுகின்றன. அதாவது, சின்னச் சின்னச் செலவுகளையும் கடனின்மூலம் செய்யச்சொல்கிறார்கள், அப்போது அவை பெரிய பெரிய செலவுகளாக ஆகிவிடும்.
ஒருவர் படிப்புக்காகவோ வீடு வாங்கவோ கடன் பெறுகிறார் என்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகைதான் அவருக்குத் தேவைப்படும், அதை மீறிக் கூடுதல் கடன் வாங்கமாட்டார். அப்படிக் கடன் வாங்கியபிறகு, அந்தப் படிப்பும் வீடும் மற்ற பெரிய பொருட்களும் அவருக்கு அந்தக் கடனைத் தொடர்ந்து நினைவுபடுத்தும். மாதந்தோறும் பணத்தை அதற்காக எடுத்துவைக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றும். இந்தச் ‘சும்மா வாங்கும்’ கடன்கள் அந்த நிதி ஒழுக்கத்தை நமக்குத் தராது. அதனால், இவற்றை நாம் திருப்பிச் செலுத்துவோம் என்பது உறுதியில்லை, அதன்மூலம் தேவையற்ற மனச்சுமை, வட்டிச்சுமை.
அதைவிட முக்கியம், இந்த விளம்பரங்களையும் இவற்றின்மூலம் கடன் வாங்குபவர்களையும் நம்மைச் சுற்றிப் பார்க்கப் பார்க்க, இது ஓர் இயல்பான விஷயம்தான், வருமானத்துக்குள் வாழவேண்டிய தேவையில்லை, அடிக்கடி சிறிய, பெரிய கடன்களை வாங்குவது தவறில்லை என்ற எண்ணம் நமக்குள் வந்துவிடும், அது நிம்மதியைக் கெடுக்கும்.
கிட்னி பத்திரம். எப்போதும் கடன் தீர்மானத்தை வாங்குபவர் எடுக்கவேண்டும், கடன் கொடுப்பவர் அதைத் தீர்மானிக்கிறார் என்றால் ஆபத்துதான். இதைப்பற்றி உங்கள் நண்பர்களை, முக்கியமாக இளைஞர்களை எச்சரியுங்கள்.