நேர்முகத் தேர்வுகளின்போது (Interview) நம்மிடம் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் திணறவேண்டியதில்லை, தடுமாறவேண்டியதில்லை. குறிப்பாக, அவமானப்படவேண்டியதில்லை.
ஏனெனில், நம் துறை சார்ந்த எல்லாக் கேள்விகளுக்கும் நமக்குப் பதில் தெரியும் என்ற எதிர்பார்ப்புடன் நேர்முகத் தேர்வுக்குள் நுழைவது அபத்தம். ஏனெனில், அது நமக்குத் தெரியாது, யாருக்கும் தெரியாது.
அதேபோல், உங்களை இன்டர்வ்யூ செய்கிறவரும் அந்த எதிர்பார்ப்புடன் வரமாட்டார், வரக்கூடாது, வந்தால் அவர் ஒரு முட்டாள், வேறில்லை.
ஆக, நாம் எவ்வளவு நன்கு நம்மைத் தயார்செய்துகொண்டாலும் நிகழ்தகவுக் கணக்கின்படி நமக்குப் பதில் தெரியாத ஒரு கேள்வி கேட்கப்படத்தான் வாய்ப்புகள் அதிகம். அந்த வாய்ப்பை எந்த அளவு குறைக்கிறோம் என்பதில்தான் நம் அனுபவமும் படிப்பும் தெரிந்ததைப் பயன்படுத்திக்கொள்கிற (Applying what we know) திறமையும் உதவுகின்றன.
அதனால், பதில் தெரியாத ஒரு கேள்வியைச் சற்றுப் பொறுமையுடன் எதிர்கொள்ளலாம்.
முதலில், அந்தக் கேள்வியைப்பற்றிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்கலாம். பல நேரங்களில் தொடக்க அதிர்ச்சியைத் தாண்டிப் பதற்றமில்லாமல் சில விநாடிகள் யோசித்தாலே அந்தக் கேள்வியும் பதிலும் நமக்குத் தெரிந்தவைதான் என்பது நினைவுக்கு வந்துவிடும், ‘அட, இதை எப்படி மறந்தேன்?’ என்று அசட்டுச் சிரிப்புடன் பதில் சொல்லிவிடுவோம்.
இதற்குக் காரணம், நேர்முகத் தேர்வுகள் உண்டாக்குகிற பரபரப்பும் அழுத்தமும்தான். Interview Pressure ஒருவர் நன்கு தெரிந்த விஷயங்களையும் மறக்கச் செய்வது எல்லாருக்கும் பொருந்தும், பெரும் திறமைசாலிகளுக்கும்தான்.
ஒருவேளை, அப்படிச் சிந்தித்தபிறகும் ஏதும் நினைவுக்கு வராவிட்டால், நமக்கு நாமே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் அறிந்த வேறு விஷயங்களை வைத்து இந்தப் பதிலை என்னால் வருவிக்க (Derive) இயலுமா?’
எடுத்துக்காட்டாக, 38ஐயும் 43ஐயும் பெருக்கினால் என்ன என்கிற கேள்விக்கு உங்களுக்கும் எனக்கும் விடை தெரியாது. ஆனால், ஒரு தாளும் பென்சிலும் கொடுத்தால் சில விநாடிகளில் பதில் கண்டுபிடித்துவிடுவோம். இதுதான் வருவித்தல், அதாவது, விடையைக் கொண்டுவருதல்.
ஆனால், எத்தியோப்பியாவின் தலைநகரம் என்ன என்கிற கேள்விக்கு நமக்கு விடை தெரிந்தால் தெரியும், தெரியாவிட்டால் தெரியாது. தலைகீழாக நின்றாலும் அதை நம்மால் “வருவிக்க” இயலாது.
நாம் அன்றாடம் எதிர்கொள்கிற 99% பிரச்சனைகளை நாம் இதற்குமுன் சந்தித்ததில்லை. ஆனாலும், அவற்றில் பெரும்பாலானவற்றைத் தீர்க்கத்தான் செய்கிறோம். அதற்குக் காரணம் இந்த வருவித்தல்தான். நாம் அறிந்தவற்றைப் பயன்படுத்தி அறியாதவற்றை அறிந்துகொள்ள நம்மால் இயலும். ஆனால் அது எல்லா இடங்களிலும் பொருந்தாது.
ஆக, நாம் தடுமாறுகிற இந்தக் கேள்விக்கான பதிலை நம்மால் வருவிக்க இயலுமா, இயலாதா என்று நமக்குத் தெரியவேண்டும். வருவிக்க இயலும் என்றால், ‘நான் முயன்று பார்க்கிறேன், சிறிது நேரம் கொடுங்கள்’ என்று நேர்முகத் தேர்வு நடத்துபவரிடம் கேட்கலாம், அவர் அதை விரும்பி வரவேற்பார். ஏனெனில், மனப்பாடம் செய்து பதில் சொல்கிறவர்களைவிட இப்படிப் பதில்களை வருவிக்கிற திறமையாளர்கள்தான் அவர்களுக்குத் தேவை.
ஒருவேளை, அது பதில் வருவிக்க இயலாத கேள்வி என்றால், அல்லது, உங்களுக்கு வருவிக்கத் தெரியாது என்றால், அதை ஒப்புக்கொள்ளலாம். ‘எனக்கு இந்த அளவுதான் தெரியும், இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. மன்னியுங்கள்’ என்று சொல்லிவிடலாம்.
எனக்குத் தெரியாது என்று சொல்வது, அதுவும் நம் திறமையை எடைபோட்டுக்கொண்டிருக்கிற ஒருவரிடம் அப்படிச் சொல்வது சங்கடமான விஷயம்தான். ஆனால் அரை உண்மைகள், அரைப் பொய்கள், முழுப் பொய்களைவிட, தெரியாததைத் தெரிந்ததுபோல் நடிப்பதைவிட, கற்பனையான ஒரு பதிலை உருவாக்குவதைவிட அது சிறந்தது. நம்மால் இயன்றவரை முயன்றுபார்த்துவிட்டுக் கைவிரிப்பது நேர்மையான செயல்.
அறிவு, அனுபவ முதிர்ச்சி கொண்டவர்கள் இந்தப் பதிலைக் கேட்டு உங்களைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தமாட்டார்கள், அதை எளிதாக எடுத்துக்கொண்டு இன்னொரு கேள்விக்குச் சென்றுவிடுவார்கள். தொடர்ந்து எல்லாக் கேள்விகளுக்கும் இந்தப் பதிலைச் சொன்னால்தான் பிரச்சனை. அதன் பொருள், அந்தத் தலைப்பிலான நேர்முகத் தேர்வுக்கு நாம் நம்மைச் சரியாகத் தயார் செய்துகொள்ளவில்லை என்பதுதான்.
சுருக்கமாகச் சொன்னால், ‘தெரியாது’ என்று ஒப்புக்கொள்ள அவமானப்படவேண்டியதில்லை, ஆனால், அது அடிக்கடி நடந்தால் என்ன பிரச்சனை என்று நம்மை நாமே எடைபோட்டுக்கொண்டு வேண்டிய திருத்தங்களைச் செய்துகொள்ளவேண்டும்.
***
தொடர்புடைய புத்தகம்: எனக்கு வேலை கிடைக்கும் by என். சொக்கன்