சற்றுமுன் ஓர் அலுவலகக் கூட்டம். அதில் கலந்துகொண்டவர்களுள் நான்தான் (இந்த நிறுவனத்துக்கு) மிகப் புதியவன். அதனால், என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னார்கள்.
நான் இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெயர், ஊர், அனுபவமெல்லாம் சட்டென்று சொல்லிவிடலாம், அதன்பிறகு? இங்கு சேர்ந்து பல மாதங்களாகிவிட்டன, பல வேலைகளைச் செய்துள்ளோம், அவற்றுள் எதைச் சொல்வது என்று சற்றுத் திகைத்தேன்.
இந்தக் கோணத்தில் யோசித்தபோது, வரிசையாகப் பல வேலைகள் நினைவுக்கு வந்தன. அவையெல்லாம் செய்யும்போது பெரியவையாக, மிகப் பெரியவையாக, கடினமானவையாக இருந்தன. ஆனால் அவற்றை வசதியாகச் செய்துமுடித்துவிட்ட இன்றைய புள்ளியிலிருந்து பார்க்கும்போது சிறியவையாக, முக்கியத்துவம் அற்றவையாகத் தோன்றின. அதனால், இப்போது நான் செய்துகொண்டிருக்கிற இரு விஷயங்களைமட்டும் சொல்லி அமர்ந்தேன். (உண்மையில் அவைதான் என் சரியான அடையாளமாக எனக்குத் தோன்றின.)
ஆனால், என்னுடைய மேலாளர் விடவில்லை. ‘இவன் இந்த இரண்டில்மட்டும்தான் ஈடுபடுகிறான் என்று நினைத்துவிடாதீர்கள்’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு, நான் இதுவரை செய்த பல வேலைகளைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டிக் குழுவுக்கு என்னை இன்னும் ஆழமாக அறிமுகப்படுத்தினார்.
நான் இதைப் பெருமைக்குச் சொல்லவில்லை. உண்மையில் இங்கு நான் செய்தது (my judgement) தவறு. என் மேலாளர் சொன்ன எல்லா வேலைகளும் சில நிமிடங்களுக்குமுன் என் நினைவுக்கு வந்தவைதான். ஆனால், அவற்றை இந்தக் குழுவின்முன் சொல்வது சரியில்லை அல்லது தேவையில்லை என்று நான் தீர்மானித்திருந்தேன். அவற்றையெல்லாம் வடிகட்டி இப்போதைய ஓரிரு வேலைகளைப்பற்றிமட்டும் பேசியதன்மூலம் என்னைப்பற்றிய ஒரு தட்டையான பார்வையை எல்லார் மனத்திலும் உருவாக்கிவிட்டேன். வருங்காலத்தில் வேறொரு பணியில் நானும் அவர்களும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வரும்போது, இந்தத் தட்டையான அறிமுகம் எங்களுக்குள் சரியான இணக்கத்தை உண்டாக்காமல் தடுக்கும்.
அதனால், என்னுடைய இந்தத் தீர்மானமும் அந்த அறிமுகமும் தவறு, போதாது என்று என் மேலாளர் மறைமுகமாக எனக்குக் கற்றுத்தந்துவிட்டார். அத்துடன், இதையெல்லாம் (மிகச் சிறிய விஷயங்களைக்கூட!) இவர் எப்படி நினைவில் வைத்திருக்கிறார் என்று எனக்குள் வியப்பை உண்டாக்கிக் கூடுதல் மதிப்பெண்ணும் வாங்கிவிட்டார்!
Is your manager is Saurabh??
No 🙂