ஆசாத் பாய் (எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத்) எனக்குப் பல்லாண்டுகளாக அறிமுகம். ஆனால், அவரைப்பற்றி நான் நினைத்த, அவரிடம்கூட இதுவரை சொல்லாத ஒரு ரகசியம் உள்ளது.
அவர் புத்தகங்கள் எழுதத் தொடங்கிய நேரம். அவருடைய ஒரு புத்தகத்துக்குத் திட்டமிடுவது தொடர்பாக என்னை அழைத்தார். எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் என்று நினைவு. அதை எப்படி அமைக்கலாம், தகவல்களை எப்படித் திரட்டலாம், எப்படி வழங்கலாம் என்பதுபோல் விரிவாகப் பேசினோம்.
ஆனால், அவர் அந்தப் புத்தகத்தை எழுதவில்லை. அதன்பிறகு பல ஆண்டுகள் எந்தப் புத்தகமும் எழுதவில்லை.
ஒருவிதத்தில் இது எனக்குச் சிறு எரிச்சலைத்தான் தந்தது. நான் அவருடன் பேசியபோது அவர் அந்தப் புத்தகத்தை எழுத மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதுபோல்தான் தெரிந்தது. ஆனால், எழுதவில்லை. ‘நன்கு எழுதுகிற ஒருவர் ஏன் எழுதாமல் இடைவெளி விடவேண்டும், அப்படி என்ன காரணம் இருக்கமுடியும்?’ என்று யோசித்தேன், நல்லவேளையாக, அவரிடம் அதைக் கேட்கவில்லை.
அப்போது நான் வயதில், அனுபவத்தில், முதிர்ச்சியில் சிறியவன், என் உலகம்தான் எல்லாருடைய உலகமும் என்ற பார்வைதான் இருந்தது. அதனால், என்னைப்போல் சிந்திக்காதவர்கள், நடந்துகொள்ளாதவர்கள்மீது சினமோ இழிவெண்ணமோ வந்தது. அதுபோன்ற One Size Fits All எதிர்பார்ப்புகளெல்லாம் தவறு என்கிற புரிந்துகொள்ளல் வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகின.
இதனிடையில் ஆசாத் பாய் இந்தியா திரும்பினார், வரிசையாக ஆண்டுக்கு ஒரு நாவல் (அல்லது அதற்குமேல்) எழுதத் தொடங்கினார், அதுவும் தமிழில் இதுவரை பதிவு செய்யப்படாத விஷயங்களை, அவர்மட்டும் எழுத இயலுகிற வகையில். அவருடைய நாவல்கள் பெறும் பரிசுகளும் பாராட்டுகளும் எனக்கு அவரைவிடக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றன.
ஏனெனில், ஆசாத் பாய் மிக நல்ல நண்பர், அன்புருவான மனிதர் என்றெல்லாம் எனக்குத் தெரியும், நான் அவர்மீது வைத்துள்ள பெருமதிப்பை அவரும் அறிவார். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த சிறுபிள்ளை அறிவை வைத்துக்கொண்டு அவருடைய எழுத்துவன்மைமீதோ, ஆர்வத்தின்மீதோ, உழைப்பின்மீதோ நான் ஐயம் கொண்டிருக்கக்கூடாது. அவருக்கு உவப்பான களம் கிடைக்கக் கொஞ்சம் நேரமாகியிருக்கிறது, அவ்வளவுதான்.
உங்களிடமிருந்து இன்னும் நூறு நாவல்கள் மலரட்டும் ஆசாத் பாய்!