கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படி என்று தெரிந்துகொள்வதற்காக என்னைத் தொடர்பு கொள்கிற நண்பர்கள் பலரும் அடுத்த சில நாட்களுக்குள் புத்தகம் வெளியிட்டுவிடுகிறார்கள். உண்மையில் அது அவ்வளவு எளிதான விஷயம்தான், ‘ஈஸிதாங்க, முயன்று பாருங்க, சரியா வரும்’ என்று சும்மா நம்பிக்கை சொல்லித் தூண்டுவதற்கு ஒருவர் தேவை, அதற்குமேல் அது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. முதல் புத்தகம் மட்டும்தான் கொஞ்சம் சிரமம், அதை வெளியிட்டுவிட்டால் அதிலிருக்கும் சுதந்தரம் பிடித்துப்போய்விடும், அடுத்தடுத்த புத்தகங்களை இன்னும் விரைவாக, இன்னும் ஆர்வத்துடன் வெளியிடுவீர்கள்.
அதே நேரம், கிண்டிலில் பதிப்பித்த அனைத்தும் உடனே விற்றுவிடாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லாப் புத்தகங்களுக்கும் மார்க்கெட்டிங் தேவை. ஆனானப்பட்ட சேதன் பகத்தே தன்னுடைய புதிய நூலைச் சந்தைப்படுத்துவதற்காகச் சேப்புக்கலர் சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
மார்க்கெட்டிங், அதாவது, சந்தைப்படுத்துதல் என்பது ஒரு மிகப் பெரிய கலை. அதையெல்லாம் முழுக்கக் கற்றுக்கொள்வதற்கு நாளாகும், அதே நேரம், முழுக்கக் கற்றுக்கொண்டுதான் உள்ளே இறங்குவேன் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு அது ஒன்றும் நீச்சலில்லை. எளிமையாகத் தொடங்கலாம், அதில் கிடைக்கிற (அல்லது கிடைக்காத) பலன்களை வைத்துப் பாடம் கற்றுக்கொண்டு முன்னேறலாம். எனக்குத் தெரிந்த பல எழுத்தாளர்கள் இப்படித் தயக்கத்துடன் மார்க்கெட்டிங்கில் கால் வைத்து, ஆழம் பார்த்து, மிக விரைவில் (சில மாதங்களுக்குள்) இதில் விற்பன்னராகிவிட்டார்கள், அதற்கேற்ப அவர்களுடைய புத்தகங்களும் நன்கு விற்கின்றன.
எடுத்துக்காட்டாக, நூலை வெளியிடும்போது நல்ல அறிமுகம் ஒன்றை எழுதுவது, அதை மக்கள் எப்படியெல்லாம் தேடக்கூடும் என்று சிந்தித்துச் சரியான குறிச்சொற்களைச் (tags) சேர்ப்பது, அட்டைப்படத்தைப் பளிச்சென்று ஆக்குவது, நூலைப்பற்றி நாலு இடங்களில் சொல்வது, அதாவது, அந்த நூலைப் படிக்கக்கூடியவர்கள் இருக்கிற நாலு இடங்களில் சொல்வது, இலவச, விலைக்குறைப்புச் சலுகைகளை அறிவிப்பது, விமர்சனங்களை வரவேற்பது, நூல் என்ன சொல்கிறது என்பதுபற்றி இணையத்தளங்கள், பாட்காஸ்ட்கள், யூட்யூப் சானல்களுக்குப் பேட்டியளிப்பது, நூலிலிருந்து மாதிரி அத்தியாயங்களை வெளியிடுவது என்று ஒரு பைசா செலவில்லாத பல வழிகள் இருக்கின்றன. அதே நேரம், இவற்றுக்காக நேரம் செலவிடவேண்டியிருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.
இப்படி நேரம் செலவழித்து இந்த நுட்பங்களை ஓரளவு கற்றுக்கொண்டபின் அந்தப் பணத்தை முதலீடு செய்து ‘மார்க்கெட்டிங் உதவியாளர்’களை உள்ளே கொண்டுவரலாம், புதிய நூல்களுக்குக் காசு செலவழித்து விளம்பரம் செய்யலாம், பணத்தைப் போட்டால்தான் பணத்தை எடுக்க இயலும் என்கிற பொன்விதி புத்தக வெளியீட்டுக்கும் பொருந்தும்.
‘அதெல்லாம் எனக்குச் சரிப்படாது, எனக்கு எழுதுவதில்மட்டும்தான் விருப்பம்’ என்று சொல்கிறவர்கள் ஒவ்வொரு நூல் வெளியீட்டின்போதுமட்டும் சில Lite Marketing நுட்பங்களைப் பின்பற்றலாம். இது ஒன்றும் நிரந்தர வேலையில்லை, இப்படியொரு புத்தகம் வெளிவந்திருக்கிறது என்று உலகத்துக்குச் சொல்லவேண்டும், அதன்மூலம் சிறு பரபரப்பை/புகழ் அலையை உருவாக்கவேண்டும், அதன்பிறகு, அவ்வப்போது ‘இந்தப் புத்தகமும் சந்தையில் இருக்கிறது’ என்று தெரியப்படுத்துவதற்கு ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும், மற்றபடி உங்கள் புத்தகத்தில் சரக்கு இருந்தால் அது தன்னைத் தானே விற்றுக்கொள்ளும், நீங்கள் அடுத்த புத்தகத்தை எழுதத் தொடங்கலாம்.
சிறப்பாக எளிமையாக சொல்லி உள்ளீர்கள்! நன்றி!!