என்னுடைய பணி மேசையில் அருகருகில் இரண்டு கணினிகள் உள்ளன. இடப்பக்கம் உள்ளது அலுவலகக் கணினி, வலப்பக்கம் உள்ளது தனிப்பட்ட கணினி. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வகைக் கணினிதான் என்றாலும் இதற்கு அது, அதற்கு இது என்ற வேறுபாட்டைப் பல ஆண்டுகளாகப் பின்பற்றுகிறேன். ஆகவே, அலுவலகக் கணினியில் தமிழ் எழுதச் சிரமப்படுவேன், தனிக் கணினியில் அலுவல் பணிகளைச் செய்ய மனம் ஒப்பாது.
அலுவலகம் சென்றாலும் சரி, வீட்டிலிருந்து பணியாற்றினாலும் சரி, இந்த நேரத்திலிருந்து இந்த நேரம்வரை அலுவலகப் பணிகள் என்று ஒரு வரையறை வைத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இடப்பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டுவிடுவேன், சரியாக அந்த நேரம் தாண்டியதும் வலப்பக்கம் திரும்பி இந்தக் கணினியைத் திறப்பேன், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், எழுத்துப் பணிகளைக் கவனிக்கத் தொடங்குவேன். அதாவது, அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சுமார் அறுபது டிகிரி இடைவெளி.

சென்ற வாரம், எங்கள் அலுவலகத்தில் ஒரு மிக முக்கியமான திட்டமிடல் பணி. அதை ஒருங்கிணைக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். அதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த பலருடன் நாள்முழுக்கத் தொடர்ந்து பேசவேண்டியிருந்தது. இதனால், இந்த அறுபது டிகிரி இடைவெளியைச் சரியாகப் பராமரிக்க இயலவில்லை, பெரும்பாலான நேரம் இடப்பக்கக் கணினியிலேயே சென்றது.
என்றாலும், இரவிலோ அதிகாலையிலோ சிறிது நேரமேனும் வலப்பக்கக் கணினியில் செலவிடுவேன், நாள்தோறும் சில நூறு சொற்களாவது எழுதினால்தான் எனக்கு மகிழ்ச்சி.
நேற்று, அந்தக் கணக்கும் கெட்டுப்போனது. இரவு நெடுநேரம்வரை அடுத்தடுத்து வேலை, பலருடன் உரையாடல், விவாதம், சண்டை, கெஞ்சல், மன்னிப்பு கோரல், பிடிவாதம் பிடித்தல் என்று நேரம் ஓடிக்கொண்டே இருந்தது, வலப்பக்கக் கணினியை ஏக்கத்துடன் பார்த்தபடி வேலையைக் கவனித்தேன்.
ஒருவழியாக, வேலைகள் நிறைவடைந்தன. அதாவது, ‘மீதமுள்ளதைத் திங்கட்கிழமைதான் பார்க்கவேண்டும்’ என்கிற நிலை வந்தது. அதற்குள் நான் உடலளவிலும் மனத்தளவிலும் மிகக் களைத்திருந்தேன். வலப்பக்கம் திரும்பாமலே தூங்கச் சென்றுவிட்டேன்.
இது ஓர் அற்ப விஷயம்தான். ஆனால், அலுவலகப் பணியை முடித்த நிலையில் நாளும் முடிவது என்பது தனிப்பட்டமுறையில் எனக்கு ஒரு பெரிய தோல்வி. இன்று காலை எழுந்து வலப்பக்கக் கணினியில் இந்தக் கட்டுரையை எழுதிவிட்டேன். ஆனாலும், நேற்றைய நாள் திரும்ப வரப்போவதில்லையே.
நேற்று என்னுடைய மேலாளரிடமும் இதைப்பற்றிப் பேசினேன். அவர் தனக்குப் பின்னால் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஓவியங்களைச் சுட்டிக்காட்டினார், ‘இதெல்லாம் நான் வரைஞ்ச ஓவியங்கள்தான். ஆனா, கடந்த நாலு மாசமா பிரஷ்ஷைப் பிடிக்கலை. அவ்ளோ வேலை’ என்றார். ‘கவலைப்படாதீங்க, இதெல்லாம் ஒரு Phase, சரியாகிடும், மறுபடி நீங்க எழுதுவீங்க, நான் வரைவேன், அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கறதுக்காகதானே இந்த ஆஃபீஸ் வேலையெல்லாம்?’
தொடர்புடைய கட்டுரை: என்னுடைய எழுதுமிடம்

1 Comment