இணையத்தின் மிகப்பெரிய வாசகர் தளமான GoodReadsல் இந்த வாரம் ‘Young Adult Week‘ கொண்டாடுகிறார்கள். அதாவது, டீனேஜ் எனப்படும் பதின்பருவத்தில் தொடங்கி, இருபதுகளின் முற்பகுதிவரையுள்ள வாசகர்களுக்காக எழுதப்பட்ட நூல்களைப் படிக்கச் சொல்கிறார்கள்.
‘இளையர் நூல்கள்’ எனப்படும் இவ்வகை நூல்கள் தமிழில் மிகுதியாக இல்லை என்பதுதான் உண்மை. நாம் சிறுவர் கதைகளில் இருந்து நேரடியாகப் பெரியோர் நூல்களுக்குத் தாவவேண்டியிருக்கிறது, ஒருவேளை அப்படித் தாவ இயலாவிட்டால், பலருக்குப் படிக்கும் பழக்கமே நின்றுவிடுகிறது.
ஆனால், ஆங்கிலத்தில் YA Fiction, Nonfiction என்று பலவகை நூல்கள் தொடர்ந்து வெளியாகின்றன, பலதரப்பட்ட தலைப்புகளைத் தொட்டுச்செல்கிறார்கள், குறிப்பாக, இந்த வயது வாசகர்களைமட்டுமே மனத்தில் வைத்து எழுதுகிறார்கள், அவர்களுடைய விரைவான வாசிப்புக்குத் தீனி போடுகிறார்கள், அதன்மூலம் படிக்கும் பழக்கத்தைக் கொஞ்சமேனும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள், பொது நூல்களுக்கான வாசகர்களைக் கூடுதல் எண்ணிக்கையில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள், அடுத்தடுத்த தலைமுறைகள் தொடர்ந்து படிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்கங்கள் பழைய வாடையில்லாமல் புதிய மொழியில் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றன.
ஆக, கண்முன்னே ஒரு வெற்றிச் சூத்திரம் இருக்கிறது. இதற்குமேல் அதைத் தமிழில் பயன்படுத்திக்கொள்ள இயலுமா என்றுதான் தெரியவில்லை.