சட்டையும் அட்டையும்

முன்பெல்லாம் துணி வாங்கிச் சட்டை தைத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய உடல் அளவுகள், விருப்பங்களின் அடிப்படையில் அந்தச் சட்டை உருவாக்கப்படும். இதற்காகச் சில நாட்கள் காத்திருக்கவேண்டும், ஆனால், அந்தக் காத்திருப்புக்குப் பலன் இருக்கும், அதாவது, நமக்கு மிகப் பொருத்தமான ஒரு சட்டை கிடைக்கும்.

தொழில்துறையில் இதை “Made to Order” என்பார்கள், அதாவது, வாடிக்கையாளருடைய ஆணைப்படி உருவாக்கப்பட்ட பொருள்.

பின்னர் ரெடிமேட் சட்டைகள் வந்தன. இவற்றைச் சில பொதுவான அளவுகளில் மொத்தமாகத் தயாரித்துக் கடைகளில் அடுக்கிவிடுவார்கள், நமக்குப் பிடித்ததை உடனே வாங்கிப் போட்டுக்கொள்ளலாம், அளவு கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம், சில வடிவமைப்பு அம்சங்கள் நமக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால், சட்டை உடனே கிடைத்துவிடும், காத்திருக்கவேண்டியதில்லை.

தொழில்துறையில் இதை “Make to stock” என்பார்கள், அதாவது, வாடிக்கையாளர் ஆணையிடாமல், கடைகளில் கையிருப்பு வைத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பொருள்.

புத்தகங்களுக்கான அட்டைகள் பெரும்பாலும் Made to Order வகையைச் சேர்ந்தவை. அதாவது, புத்தகம் எழுதியபின் அந்தப் புத்தகத்தின் தன்மை, அதைப் படிக்கப்போகிறவர்களுடைய பொதுவான எதிர்பார்ப்புகளின்படி அந்த அட்டை அமையும்.

ஆனால், மின்னூல்களின் வளர்ச்சியும், இன்றைக்கு நூல்கள் எழுதப்படுகிற வேகமும் இந்தக் கணக்கை மாற்றிவிட்டன. இப்போது “Make to Stock” அட்டைப்படங்கள் ஏராளமாக உருவாக்கப்படுகின்றன, அதாவது, கதையா, கவிதையா, கட்டுரையா, வாழ்க்கை வரலாறா, சுயமுன்னேற்றமா என்றெல்லாம் யோசிக்காமல் விதவிதமான அட்டைப்படங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அந்த அட்டைப்படங்களை விரும்புகிறவர்கள் அவற்றைக் காசு கொடுத்து வாங்கித் தங்கள் நூலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை “Premade Book Covers” என்கிறார்கள்.

அட்டைப்படங்கள் புத்தகத்துக்கு இணையான படைப்புகளாகக் கருதப்படுகிற சூழலில், நம்முடைய புத்தகத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாத யாரோ ஒருவர் தயாரித்த அட்டைப்படத்தை வாங்கிப் பயன்படுத்துவது கொஞ்சம் திடுக்கென்றுதான் இருக்கிறது. ஆனால், நூற்றுக்கணக்கில் அட்டைப்படங்கள் குவிந்திருக்கிற சூழலில் நமக்குப் பொருத்தமான ஒன்று எதேச்சையாகக் கிடைத்துவிடுகிற வாய்ப்பும் இருக்கிறதுதான்.

இன்னொருபக்கம், அட்டைப்பட வடிவமைப்புக் கலைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பைத் திறக்கிறது. ஓய்வு நேரத்தில் விதவிதமான அட்டைப்படங்களைச் செய்து விற்பனைக்கு வைக்கலாம், பிடித்தவர்கள் எடுத்துக்கொள்வார்கள். குறிப்பாக, காதல் கதைகள், த்ரில்லர் கதைகள், சுய முன்னேற்றப் புத்தகங்கள் போன்றவற்றுக்கான அட்டைகளுக்குப் பெரிய தேவை இருக்கிறதாம்!

யார் கண்டது, வருங்காலத்தில் Prewritten Chapters, Premade Characters, Prewritten Dialogues, Prewritten Jokes போன்றவைகூட அறிமுகமாகலாம், “எனக்கு ஒரு நல்ல(?) வில்லன் கேரக்டர் வேணும், யார்கிட்டயாவது இருக்கா?” என்று எழுத்தாளர்கள் இணையத்தில் கோரிக்கை விடுக்கலாம்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *