A L கென்னடி என்று ஓர் எழுத்தாளர். புக்கர் பரிசுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதற்காக அவர் சுமார் 200 புத்தகங்களைப் படிக்கவேண்டியிருந்தது, அந்த இருநூறு புத்தகங்களுள் மிகச் சிறந்தவையாக அவர் தேர்ந்தெடுக்கிற புத்தகங்கள்மட்டும்தான் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
அந்த நேரத்தில், கென்னடியின் நண்பர் ஒருவர் அவரைச் சந்தித்தார், ‘ஆத்தாடி, இத்தனைப் புத்தகங்களா?’ என்று திகைப்போடு கேட்டார், ‘இவை அனைத்தையும் முழுமையாகப் படித்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்கு நெடுநேரம் ஆகிவிடுமே!’
‘நான் இவற்றை முழுக்கப் படிக்கப்போவதில்லை’ என்றார் கென்னடி, ‘மேலோட்டமாகக் கொஞ்சம் படித்தாலே போதும், எது நல்ல புத்தகம் என்று தெளிவாகத் தெரிந்துவிடும்.’
‘கொஞ்சம் என்றால் எவ்வளவு?’ ஆர்வத்துடன் கேட்டார் அந்த நண்பர், ‘ஒன்றிரண்டு அத்தியாயங்களைப் படிப்பீர்களா?’
‘அவ்வளவெல்லாம் இல்லை, எட்டே எட்டு வரிகள்’ என்று பதில் சொன்னார் கென்னடி.
அந்த நண்பர் திகைத்துப்போனார், ‘எட்டுப் பக்கங்கள் என்று சொல்லவந்தீர்களோ?’
‘ம்ஹூம், இல்லை, ஒவ்வொரு புத்தகத்திலும் முதல் எட்டு வரிகளைமட்டும்தான் படிப்பேன். அதற்குள் என்னைக் கவர்ந்திழுத்தால் நல்ல புத்தகம், இல்லாவிட்டால் ஓரமாக வைத்துவிட்டு அடுத்த புத்தகத்துக்குப் போய்விடுவேன்.’
ஓர் இணையக் கலந்துரையாடலில் இந்தத் துணுக்குச் செய்தியைக் கேட்டபோது தூக்கிவாரிப்போட்டது. ஃபேஸ்புக்கில்தான் மக்கள் முதல் நாலு வரியைப் படித்துவிட்டு அடுத்த பதிவுக்குத் தாவுகிறார்கள் என்று பார்த்தால், புக்கர் பரிசுபோன்ற ஒரு பெரிய விஷயம்கூட முதல் எட்டு வரிகளில்தான் தீர்மானிக்கப்படுகிறதா? ஒருவேளை, ஒருவர் ஒன்பதாவது வரியிலிருந்து தொடங்கி ஒரு மிகச் சிறந்த காவியத்தை எழுதியிருந்தாலும், முதல் எட்டு வரிகளால் அது நிராகரிக்கப்பட்டுவிடுமா?
இன்னொரு கோணத்தில் யோசித்தால், இதுவும் ஒருவகையில் நியாயமாகதான் தோன்றுகிறது. நேர நெருக்கடியில் இருக்கிற இன்றைய வாசகர்களை (பரிசுக்குழு நடுவர்களையும்) முதல் சில வரிகளில் சுண்டியிழுக்கவேண்டியதும் எழுதுபவருடைய பணிதான். வேண்டுமென்றால் எட்டைப் பதினாறாக்கலாம், இருபத்து நான்காக்கலாம், அதற்குள் அவர்களைப் பிடித்துக்கொண்டுவிடவேண்டும். இல்லாவிட்டால், அவர்களைக் கவர்ந்திழுக்க வேறு பல விஷயங்கள் இருக்கின்றன.
அமேசான் கிண்டில் நூல்களின் Look Inside, Download Sample போன்ற வசதிகள் கிட்டத்தட்ட இதைத்தான் செய்கின்றன, புத்தகத்தின் முதல் சில பக்கங்களைத் தந்து வாசகர்களை ஈர்க்க முயல்கின்றன. அவற்றைப் படித்தபின் வாசகர்கள் பர்ஸைத் திறக்கிறார்களா அல்லது பிரௌசரை மூடுகிறார்களா என்பது உங்களுடைய முதல் சில பக்கங்களில் அல்லது வரிகளில் இருக்கிறது.