வழிகாட்டல்

மங்கையின் பள்ளியில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் தருகிற கருத்தை மையமாகக் கொண்டு மாணவர்கள் கதைகளை எழுதவேண்டும், அதில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவார்கள்.

இந்தப் போட்டியில் மங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைப்பு, ‘கெட்டதிலும் ஒரு நல்லது.’

தலைப்பைக் கேட்டதும் மங்கை என்னிடம் ஓடி வந்தாள், ‘அப்பா, இதை வெச்சு என்ன கதை எழுதலாம்? ஏதாவது ஐடியா சொல்லேன்.’

நான் கொஞ்சம் யோசித்தேன். ஒரு நல்ல கதை கிடைத்தது. கடகடவென்று அதை விவரித்துவிட்டு, ‘பிடிச்சிருக்கா?’ என்று ஆவலுடன் அவளுடைய முகத்தைப் பார்த்தேன்.

‘பிடிச்சிருக்கு, ஆனா…’ என்று இழுத்தாள் அவள், ‘இதை நான் எழுதக்கூடாதுப்பா, இது உன்னோட கதை.’

நான் சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். அவள் சொல்வது உண்மைதான். ஆலோசனை கேட்ட பிள்ளைக்குக் கொஞ்சம்போல் வழிகாட்டியிருக்கவேண்டும், முழுக் கதையையும் நானே சொல்லியிருக்கக்கூடாது.

‘பரவாயில்லைப்பா’ என்றாள் மங்கை, ‘நானே ஒரு கதை யோசிக்கறேன்’ என்று என் கணினியின்முன் சென்று அமர்ந்துகொண்டாள். பேனாவைக் கடித்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். பிறகு, தயங்கித் தயங்கி ஒரு கதையைச் சொன்னாள்.

நல்ல கதைதான். ஆனால், இந்தத் தலைப்புக்கு முழுமையாகப் பொருந்தவில்லை. அதை அவளுக்குச் சுட்டிக்காட்டினேன், ‘அட, ஆமாம்ல?’ என்று அவளே வேண்டிய திருத்தங்களைச் செய்தாள், பின்னர் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து ஒவ்வோர் எழுத்தாக அந்தக் கதையைத் தட்டச்சு செய்து போட்டிக்குச் சமர்ப்பித்தாள்.

மங்கையின் கதை சொன்ன நீதி என்னவோ, இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட நீதி: வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று நாமே மொத்த வேலையையும் செய்துவைத்தால், நம்மிடம் வழிகாட்டக் கேட்டவர்களைச் சிறுமைப்படுத்துகிறோம், அவர்களுடைய திறமையை, தன்மானத்தை இழிவுபடுத்துகிறோம் என்று பொருள்; அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பதில்களையோ தீர்வுகளையோ இல்லை, செல்லவேண்டிய திசையையும் தெளிவுபடுத்தல், நம்பிக்கை, ஆதரவையும்தான்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published.