நம்முடைய இலக்குகளை மனத்துக்குள் வைத்திருப்பதைவிட, காகிதத்தில் எழுதிவைப்பது நல்லது என்று படித்திருக்கிறேன். அவ்வாறு எழுதும்போது நம் மனத்தில் அவை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிகின்றன, அவற்றை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிறோம், சுற்றியிருக்கிற அனைத்திலும், நாம் மேற்கொள்கிற ஒவ்வோர் உரையாடலிலும் அதற்கான வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிவிடுகிறோம் என்கிறார்கள்.

‘Goals‘ என்ற பெயரில் ஒரு புகழ் பெற்ற நூலை எழுதிய Brian Tracy, ‘இலக்குகளை ஒரே ஒரு முறை எழுதினால் போதாது, ஒவ்வொரு நாளும் எழுதவேண்டும்’ என்கிறார். ‘இதற்கென்று ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொள்ளுங்கள், நாள்தோறும் உங்களுடைய இலக்குகளைத் திரும்பத் திரும்ப எழுதுங்கள், நான் இப்படிப் பல நோட்டுப்புத்தகங்களை எழுதிவைத்திருக்கிறேன், அவற்றில் எழுதப்பட்டுள்ள பல இலக்குகளை எட்டிவிட்டேன், எட்டிக்கொண்டிருக்கிறேன்.’
இலக்குகளைத் திரும்பத் திரும்ப எழுதுவதால் என்ன பயன்?
தொடக்கத்தில், நம்முடைய இலக்குகள் என்ன என்று நமக்கே தெளிவாகத் தெரியாது. அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவைப்போம். அவை உண்மையிலேயே நம்முடைய இலக்குகளாக இருக்கலாம், அல்லது, அந்த நேரத்தில் நம்மை ஈர்க்கிற விஷயங்களாக இருக்கலாம், பின்னர் வேறொரு நேரத்தில் நாம் அவற்றைத் தானே மறந்துவிடுவோம்.
அதனால்தான், பிரயன் டிரேசி நாள்தோறும் இலக்குகளை எழுதச்சொல்கிறார். அதிலும் குறிப்பாக, ‘முதல் நாள் எழுதிய இலக்குகளை மறுநாள் பார்க்கக்கூடாது’ என்கிறார், ‘நேற்றைய இலக்குகளைப்பற்றி இன்றைக்குச் சிந்திக்கலாம், அதில் எவையெல்லாம் இன்றைக்கும் நினைவு வருகின்றனவோ அவற்றைமட்டும் எழுதலாம். ஆனால், முந்தைய நாளைப் பார்த்து அப்படியே காப்பி அடிக்கக்கூடாது.’
இப்படி நாள்தோறும் மாற்றி மாற்றி எழுதும்போது, சில இலக்குகள் விடுபடும், சில இலக்குகள் புதிதாகச் சேரும், சில இலக்குகளில் சில சொற்கள் மாறும், சில இலக்குகள் மேலே, கீழே நகரும், இப்படி மாறி மாறி எழுதிக்கொண்டே வரவேண்டும். சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து ஒரு நாள், தொடர்ந்து ஒரே இலக்கை நாள்தோறும் திரும்பத் திரும்ப அதே சொற்களில், அதே வரிசையில் எழுதத் தொடங்குவோம். அவைதான் நம்முடைய உண்மையான இலக்குகள். அவற்றை எட்டுவதற்காகதான் நாம் உழைக்கவேண்டும்.
இணைப்புகள்: