பெரும்பாலானவர்களுக்கு எழுத்தார்வம் மிக இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. மொக்கையாகவே எழுதினாலும், முன்கூட்டியே தொடங்கிவிடுவது நல்லது. அப்போதுதான் அதிலிருக்கும் மொக்கைத்தனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து பின்னர் உருப்படியாக எழுதத் தொடங்க வசதியாக இருக்கும்.
ஆனால், லீ சைல்ட் (Lee Child) என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் (சொந்தப் பெயர் ஜேம்ஸ் கிரான்ட்) நாற்பது வயதுவரை எந்தக் கதையோ, நாவலோ எழுதியதில்லை. அதன்பிறகுதான் நிதானமாக எழுத உட்கார்ந்தார். 43 வயதில்தான் அவருடைய முதல் புத்தகம் வெளியானது. அதன்பிறகு வருடத்துக்கு ஒரு கதை என்ற கணக்கில் ஏகப்பட்ட நாவல்களை எழுதிவிட்டார், அவை லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன, உலகெங்கும் வாசகர்கள் அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

‘இவ்ளோ திறமையை வெச்சுகிட்டு ஏன் சார் நாற்பது வயசுவரைக்கும் எழுதாம உட்கார்ந்திருந்தீங்க?’ என்று அவரைக் கேட்டால், ‘அட, நீங்க வேற, நான் பாட்டுக்கு நிம்மதியா டெலிவிஷன் துறையில இருந்தேன், நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், என்னை அப்படியே விட்டிருந்தா அறுபது வயசுவரைக்கும் எதையும் எழுதாம சமர்த்தா என்னோட வேலையைமட்டும் செஞ்சுகிட்டு மகிழ்ச்சியா ரிடையராகியிருப்பேன்’ என்கிறார், ‘உண்மையைச் சொல்லணும்ன்னா, என்னோட மேனேஜர்மட்டும் அன்னிக்கு அந்த மூணு வார்த்தைகளைச் சொல்லலைன்னா நான் எழுத வந்திருக்கவே மாட்டேன்.’
அவருடைய மேலாளர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள்: ‘You are fired.’
ஆம், நாற்பது வயதில் அவருக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. அவரை நம்பி ஒரு சிறு குடும்பம். அவர்களைக் காப்பாற்றுவதற்காவது ஏதாவது செய்யவேண்டாமா?
ஜேம்ஸ் கிரான்ட் பல விஷயங்களை யோசித்தார். அவற்றுள் ஒன்று: கதை எழுதுவது.
சிறுவயதிலிருந்தே ஜேம்ஸுக்குப் படிப்பதில் ஆர்வம் உண்டு. ஆனால், படிப்பதும் எழுதுவது ஒன்றாகிவிடுமா? இத்தனை நாளாக வராத எழுத்து திடீரென்று இப்போது வருமா?
ஜேம்ஸின் யோசனையைக் கேட்ட அவருடைய தந்தை சிரித்தார், ‘இந்தத் துறையில் நீ வெற்றியடைவதற்கு, பணம் சம்பாதிப்பதற்குப் பத்தாயிரத்தில் ஒரு வாய்ப்புதான் இருக்கிறது’ என்றார்.
கேட்பதற்கு இது கொஞ்சம் எதிர்மறையாகத் தோன்றலாம். ஆனால், ஜேம்ஸின் தந்தை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் எழுத்தைத் தொழிலாகக் கொண்டு பிழைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு, அந்தத் துறையைமட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு முரட்டுத் துணிச்சல் வேண்டும்.
‘ஆகவே, நான் ஓர் உளவியல் தந்திரத்தைப் பயன்படுத்தினேன்’ என்கிறார் ஜேம்ஸ் கிரான்ட். ‘என்னுடைய புத்தகம் கண்டிப்பாக வெற்றியடையும், இதில் எந்த ஐயமும் கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதை நானே நம்பத் தொடங்கினேன். அதனால், என்னால் அச்சமில்லாமல் எழுத இயன்றது.’
எந்த அடிப்படையும் இல்லாமல் இப்படிச் சும்மா நம்பினால் போதுமா? எதார்த்தம் கண்ணுக்குத் தெரியாதா? எதிர்மறை எண்ணங்களே வராதா?
‘உண்மையில் கதை எழுதுவதன்மூலம் நான் பணம் சம்பாதித்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். அது எனக்குத் தெரியும். ஆனால், அந்த எண்ணத்தை நான் கண்டுகொள்ளவில்லை. மாறாக, எல்லாம் சரியாக நடக்கும் என்ற எண்ணத்தைமட்டும் கண்டுகொண்டேன். எழுதுவோம், அது ஒன்றுதான் நம்முடைய வேலை என்று நினைத்தேன், விடாமல் எழுதினேன், நான் நம்பியதுபோலவே நடந்தது.’
‘நம்புங்கள், எல்லாம் நடக்கும்’ என்பதைக் கேட்பதற்குக் கொஞ்சம் பம்மாத்து வேலையைப்போல்தான் இருக்கிறது. ஆனால், லீ சைல்ட் என்ற எழுத்தாளர் இதன்மூலம் பிறந்திருக்கிறார், பெரிய வெற்றி பெற்றிருக்கிறார், இந்த விஷயத்தைப் பல பேட்டிகளில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இதைக் கொஞ்சம் அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால், ஜேம்ஸ் கிரான்ட் வெறும் நம்பிக்கையைமட்டும் மூலதனமாகப் பயன்படுத்தி எழுத உட்காரவில்லை. ஏற்கெனவே பல ஆண்டுகள் பொழுதுபோக்குத்துறையில் இருந்திருக்கிறார். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி எல்லாரும் விரும்பிப் படிக்கக்கூடிய ஒரு கதையை அவரால் எழுத இயன்றிருக்கிறது. எனினும், சூழ்நிலை அவருக்கு எதிராகதான் இருந்திருக்கிறது, அவர் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு மிகக் குறைவு என்பது தெளிவாகத் தெரிந்த சூழலில், அந்த உண்மை அவருடைய எழுத்தைப் பாதித்துவிடாமலிருக்க அந்த எண்ணம் உதவியிருக்கிறது.
