நாள்தோறும் நடக்கிற பழக்கத்தால் தெற்கு பெங்களூரில் எல்லாச் சாலைகளையும் நான் நன்கு அறிவேன் என்று செருக்குற்றிருந்தேன். இன்று எங்கள் வீட்டுக்கு ஜஸ்ட் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஏதோ ஓர் உள் சாலையில் மாட்டிக்கொண்டேன். எந்தத் திசையில் என்ன இருக்கிறது, எப்படி வீட்டுக்குப் போவது என்று ஒன்றும் புரியவில்லை. கூகுள் மேப்ஸ்கூடப் பயன்படாமல் பல்லிளித்துவிட்டது. நான்கு திசைகளிலும் வெவ்வேறு சிறு தெருக்களில் பலவிதமாக நடந்தும் தொடர்ந்து முட்டுச் சந்துகளைமட்டும்தான் கண்டேன், திகைத்து நின்றேன்.
அதன்பிறகு, கொஞ்சம் நினைவாற்றலைக் கூர் தீட்டி, எந்தத் திசையிலிருந்து வந்தோம் என்று யோசித்தேன், அந்தத் திசையில் நிதானமாக நடந்து சென்று புறப்பட்ட இடத்துக்கு மீள முயன்றேன்.
நல்லவேளையாக, பாதி வழியில் சற்று பழக்கமானதுபோன்ற ஓர் இடம் தென்பட்டது. உறுதியாகத் தெரியவில்லை, ஆனாலும் அதுதான் என்று ஒரு நம்பிக்கை, துணிந்து அந்தத் திசையில் திரும்பி நடந்தேன், சற்றுத் தொலைவில் நான் தேடிய நெடுஞ்சாலை கிடைத்துவிட்டது. நிம்மதிப் பெருமூச்சுடன் வீடு திரும்பினேன்.
இன்னொரு நாள் அதே உள் சாலைக்குச் சென்று நிதானமாக அந்த இடத்தை ஆராய்ந்து பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும், நொறுங்கிப்போன செருக்கை மீட்கவேண்டும்.