சென்ற ஆண்டு நாங்கள் விசாகப்பட்டினம் செல்லத் திட்டமிட்டபோது ஒரு குறிப்பிட்ட விடுதியில் தங்கலாம் என்று யோசித்தோம். அந்த விடுதியின் புகைப்படங்கள், தகவல்கள் நன்றாக இருந்தன. உள்ளூர்க்காரர்களை விசாரித்தபோது அதைப்பற்றி நல்லவிதமாகச் சொன்னார்கள். அதனால் நாங்களும் மனத்தளவில் அதை உறுதிசெய்துவிட்டோம்.
ஆனால், சில நாட்களுக்குப்பிறகு பணம் செலுத்தலாம் என்று அந்த இணையத் தளத்துக்கு வந்தபோது, அதே ஊரில் வேறொரு விடுதி (அதுவும் புகழ் பெற்ற விடுதிதான்) சற்றுத் தள்ளுபடியில் கிடைத்தது. நாளொன்றுக்குச் சுமார் ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது என்பதால் சற்றும் யோசிக்காமல் அங்கு பணம் செலுத்திவிட்டேன்.
பின்னர் நாங்கள் விசாகப்பட்டினம் வந்து இறங்கினோம், அந்த விடுதிக்குச் சென்றோம். பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானோம்.
ஏனெனில், அந்த விடுதி நாங்கள் எதிர்பார்த்திருந்த தரத்தில் இல்லை. சிறிய அறை, சுமாரான உணவு, போதுமான வசதிகளும் கிடைக்கவில்லை.
என் மனைவியும் மகள்களும் இதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ‘தூங்கறதுக்குதான் இங்க வரப்போறோம். அதனால என்ன? விடு’ என்று இயல்பாகச் சொல்லிவிட்டார்கள்.
ஆனால், என்னால்தான் அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த விடுதியை ஆயிரம் ரூபாய்க்காக மாற்றியவன் நானல்லவா? என் பிழையால் அனைவரும் சிரமப்படுகிறார்கள் என்று வருந்தினேன்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, நாங்கள் உடை மாற்றிக்கொண்டு வெளியில் சென்றோம். ஐந்தாவது நிமிடம் நாங்கள் முன்பு தேர்ந்தெடுத்திருந்த அந்த விடுதி எங்கள் எதிரில் தோன்றியது.
சொன்னால் நம்பமாட்டீர்கள், நாங்கள் இப்போது தங்கியிருந்த விடுதியைவிட அது பலமடங்கு பெரிதாகவும் சிறப்பாகவும் இருந்தது. வெளியிலிருந்து பார்க்கும்போதே அதன் தரம் தெளிவாகத் தெரிந்தது.
என் மனைவியும் மகள்களும் அந்த விடுதியைப் பார்க்கக்கூட இல்லை. ஆனால், எனக்கு அது குற்றவுணர்ச்சியை மிகுதியாக்கியது. தலை கடுமையாக வலிக்கத் தொடங்கியது.
அன்றுமட்டுமில்லை, அடுத்த ஐந்து நாட்கள் எந்தத் திசையில் சென்றாலும் அந்த விடுதியின் விளம்பரம், அந்த விடுதியின் கார், அந்த விடுதியின் தொப்பி என்று ஏதாவது கண்ணில் தோன்றிக்கொண்டே இருந்தது. பார்க்கும் திசையிலெல்லாம் நந்தலாலா, நான் செய்தபிழை தெரியுதடா நந்தலாலா என்று பாடாத குறைதான்.
ஒருகட்டத்தில், இந்த விடுதியின் பெயர் எனக்கு உண்மையில் தெரிகிறதா, அல்லது ஏதேனும் மனநலக் குறைபாட்டால் நானே அதை எங்கும் காண்கிறேனா என்றுகூட எனக்கு ஐயம் வந்துவிட்டது. விடுமுறையை முழு மகிழ்ச்சியுடன் அனுபவிக்க இயலாமல் தவித்தேன்.
இத்தனைக்கும் அது அறியாப் பிழை. பணம் மிச்சப்படுத்தச் செய்ததுதான் என்றாலும், அந்த இரண்டாவது விடுதி இத்தனை மோசமாக இருக்கும் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை என்பதுதான் உண்மை. இரண்டும் நட்சத்திர விடுதிகள்தாம் என்பதால் ஒன்றைப்போல் இன்னொன்று இருந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், முதல் விடுதியை நேரில் பார்த்தபிறகு இரண்டாம் விடுதியின் சிறு குறைகள்கூட மிகப் பெரிதாகத் தெரிந்தன. மனம் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்று முழுமையாகப் புரிந்துகொண்டேன்.
இதை ஏன் இப்போது எழுதுகிறேன்?
இன்று பெங்களூரில் அந்த முதல் விடுதியின் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். சட்டென்று நாங்கள் தங்கிய இரண்டாவது விடுதி அறையை நினைத்து முகம் சுருங்கிப்போனேன். எந்தக் காயத்துக்கு எவ்வளவு வலிக்கலாம், எத்தனை நாள் வலிக்கலாம் என்பது உடலைப்போல் மனத்துக்குத் தெரிந்திருப்பதில்லைபோல.