எங்கள் நிறுவனத்தின் CEO சசான் (Sasan K. Goodarzi) இந்தியா வந்துள்ளார். இந்திய ஊழியர்கள் அனைவரையும் அவர் சந்தித்துப் பேசுகிற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பிரமாண்டமான இந்த நிகழ்ச்சியில், சசானுடைய தனித்துவமான அடையாளங்களாகிய மகிழ்ச்சிப் புன்னகையையும் சுறுசுறுப்பான மேடை ஆளுமையையும் முதன்முறையாக நேரில் பார்த்து ரசித்தேன். ஊழியர்களுடைய கேள்விகளுக்கு அக்கறை கலந்த பொறுப்புடனும், ஆங்காங்கு சரியான அளவில் தூவிய நகைச்சுவை உணர்ச்சியுடனும் சிறப்பாகப் பதில் சொன்னார்.
இன்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று: உங்களுக்கு மோசமான நாட்கள் வருவதுண்டா? ஆம் எனில், அந்த நாட்களின் மனநிலையை எப்படிச் சரிசெய்துகொள்வீர்கள்? நாங்களெல்லாம் ஏதாவது சாப்பிடுவோம், படம் பார்ப்போம்… நீங்களும் அதுபோல் ஏதாவது செய்வீர்களா?
இதற்கு அவர் சொன்ன பதில் அட்டகாசமானது. அதைச் சுருக்கமாக என் நினைவிலிருந்து சொல்கிறேன்:
- எல்லா மனிதர்களுக்கும் மோசமான நாட்கள் வரும், எனக்கும்தான். அலுவலகத்தில், வீட்டில் என்று எங்காவது ஏதாவது சொதப்பிவிடும்.
- அதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதைவிட, அந்த நேரங்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் பெரும்பாலும் மோசமான நாட்கள் வரவே கூடாது என்று நினைக்கிறோம். அந்த எண்ணம், எதிர்பார்ப்பால் வருகிற மன அழுத்தத்தால்தான் கண்டதைச் சாப்பிடுவது, குடிப்பது என்று சமாளிக்கும் வழிகள் (Coping Mechanisms) தேவைப்படுகின்றன. மாறாக, எல்லா நாட்களும் சிறப்பாகதான் இருக்கவேண்டும், எதுவும் சொதப்பக்கூடாது என்கிற மிகையான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளாதீர்கள், மோசமான நாட்கள் வருவதும் இயல்புதான் என்ற மனநிலையுடன் இருங்கள். அப்போது, அதுவும் ஒரு நாள், அதுவும் ஓர் அனுபவம் என்ற அளவில் கடந்து செல்வீர்கள். அது திருத்தவேண்டிய, சரிசெய்யவேண்டிய ஒன்று என்று நினைக்கமாட்டீர்கள். ‘சரியில்லையா? பரவாயில்லை, நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என்று நிம்மதியாக வேறு வேலையைப் பார்ப்பீர்கள்.
- நான் என்னுடைய ஆற்றலை எப்படிச் செலவுசெய்யவேண்டும் என்பதில் மிகுந்த ஒழுக்கம் கொண்டவன். அதனால், கவலைப்படுவது, புலம்புவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றுக்கு என்னுடைய ஆற்றலைத் தரக்கூட மாட்டேன். என் ஆற்றலுக்கு வேறு மேம்பட்ட பயன்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அதனால், கெட்டவற்றை Just கடந்து செல்ல அனுமதித்துவிடுவேன், உணர்ச்சிவயப்படமாட்டேன்.
- முக்கியமாக, ஓர் இடத்தில் உள்ள உணர்வுகளை இன்னோர் இடத்தில் கொட்டமாட்டேன். அதாவது, ஒவ்வொரு சந்திப்பையும், பணியையும் தனித்தனியாகப் பிரித்து Compartmentalize செய்துவிடுவேன். எடுத்துக்காட்டாக, இவருடன் உள்ள கூட்டத்தில் எனக்கு ஓர் எரிச்சல் வருகிறது என்றால் அடுத்தவரைச் சந்திக்கும்போது அந்த எரிச்சலைக் காண்பிக்கமாட்டேன். ஏனெனில், அந்த அடுத்தவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவருக்கு என்னுடைய மிகச் சிறந்த முகத்தை, கவனத்தை, சிந்தனையைக் கொடுக்கவேண்டிய கடமை எனக்கு உண்டு.