ஒருவர் வறுமையில் உள்ளார், பெரிய பணக்காரர் ஒருவரிடம் சென்று உதவி கேட்கிறார். அப்போது அவர் அந்தப் பணக்காரரின்முன் எப்படி ஏக்கத்துடன் தாழ்ந்து பணிந்து உதவியை எதிர்பார்த்து நிற்பாரோ, அதுபோல நாமும் அறிஞர்கள்முன் தாழ்ந்து நின்று கற்கவேண்டும் என்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள் 395). என்ன அழகான, அழுத்தமான உவமை!
கேமராவைக் கொஞ்சம் திருப்பிவைத்து அந்தப் பணக்காரருடைய கோணத்திலிருந்தும் இதைப் பார்க்கலாம். தன்னுடைய செல்வத்தை எண்ணிச் செருக்கு கொள்ளாத பணக்காரர், காந்தி சொன்னதுபோல் தன்னைச் “செல்வத்துக்குப் பொறுப்பாளராக”மட்டும் நினைக்கிற பணக்காரர் தன்னை உயர்வாகவோ, தன்முன் பணிந்து நிற்பவரை இழிவாகவோ எண்ணமாட்டார், அவரை அவமதிக்கமாட்டார், அவருக்கு உதவுவது தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என்று நினைத்து மகிழ்ச்சியுடன் உதவுவார், அவருடைய தன்மானம் இதனால் குறைந்துவிடாதபடி பார்த்துக்கொள்வார்.
நம்மிடம் அறிவைக் கேட்கிறவர்களையும் நாம் அப்படித்தான் கண்ணியத்துடன் நடத்தவேண்டும்.