எதிரியோடு மோதுவதற்கு ஏற்ற இடத்தைக் கண்டுபிடிக்கும்வரை கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருங்கள் என்கிறார் திருவள்ளுவர் (குறள் 491). அதாவது, கண்ட இடத்திலிருந்து கல் எறியக்கூடாது, எங்கிருந்து எறிந்தால் எதிரிக்கு வலிக்கும், எது நமக்குத் தொலைநோக்கில் உறுதியான வெற்றி வாய்ப்பைக் (Strategic Advantage) கொடுக்கும் என்று ஆராய்ந்து தெரிந்துகொண்டு அங்கிருந்துதான் கல்லை எறியவேண்டும். அதுவரை கற்கள் நம் கையில்தான் இருக்கவேண்டும்.
அடுத்து வரும் ‘எள்ளற்க’ என்ற சொல் அதைவிட முக்கியம். அதாவது, தாக்குவதற்குச் சரியான இடம் கிடைக்கும்வரை எதிரியை இழிவாகப் பேசாதீர்கள் என்கிறார் வள்ளுவர்.
இதன் பொருள், கையைக் கட்டினால் போதாது, சரியான தாக்குதல் திட்டம் அமையும்வரை வாயையும் கட்டவேண்டும். சினத்தைக் கட்டுப்படுத்தாமல் ‘உன்னை என்ன பண்றேன் பாரு’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருந்தால் இரண்டு பிரச்சனைகள்:
1. நேரமும் ஆற்றலும் திட்டுவதில் செலவாகிவிடும், தாக்குதலுக்குத் திட்டமிடமுடியாது.
2. நம்முடைய கத்தலைக் கேட்டு எதிரி எரிச்சலடைந்து நம்மைத் தாக்கத் தொடங்கினால் திருப்பித் தாக்குவதற்குச் சரியான திட்டமோ இடமோ இல்லாமல் வெட்டவெளியில் சிக்கிக்கொள்வோம்
இது அரசர்களுக்கு எழுதிய குறள்தான். ஆனால், ‘தாக்குதல்’ என்பதை ‘எதிர்த்துப் போட்டியிடுதல்’ என்று மாற்றிக்கொண்டால் எல்லாருக்கும் பொருந்தும். அவ்வப்போது வாயை மூடாத பிழையால் நாம் சந்தித்த/சந்திக்கிற தொல்லைகள்தான் எத்தனை எத்தனை!