நேற்று எழுதிய பாதாங்கீர் கட்டுரையைத் தொடர்ந்து என் பெற்றோரைப்பற்றி நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். சிறுவயதில் அவர்கள் எங்களை என்ன செய்து மகிழ்ச்சிப்படுத்தினார்களோ அவற்றைத்தான் நான் இப்போது என் மகள்களிடம் பிரதியெடுத்துக்கொண்டிருக்கிறேன். அதேபோல் என் மனைவியும் அவருடைய சிறுவயதில் அவருடைய பெற்றோர் அவருக்குச் செய்தவற்றைத்தான் எங்கள் குழந்தைகளுக்குச் செய்கிறார்.
அவர்கள் மாதம் சில நாட்கள் செய்ததை நாங்கள் வாரந்தோறும் செய்யக்கூடும், அவர்கள் குறைந்த செலவில் செய்ததை நாங்கள் கூடுதல் செலவில் செய்யக்கூடும். ஆனால், சாரம் அதுதான், பிரதியெடுப்பது அவர்களைத்தான். ஏனெனில், நாங்கள் வேறு மாதிரிகளை அறிந்திருக்கவில்லை.
இதனால், தாத்தா, பாட்டி நான்கு பேருடைய நன்னடத்தைகள் தந்தை, தாய் இருவர் வழியாகப் பேரப்பிள்ளைகளுக்குச் சென்றுசேர்கின்றன, மரபணுக் கணக்குமாதிரி இதுவும் ஒழுங்காக, தொடர்ச்சியாக நடக்கிறது.
இதில் முதன்மையாகக் கவனிக்கவேண்டிய விஷயம், Parenting (குழந்தை வளர்ப்பு) என்பது இப்படிக் கண் பார்க்கக் கை செய்கிற விஷயமாக, முறையான பயிற்சி வழங்கப்படாத ஒன்றாக, பெற்றோரைப் “போலச்செய்தலாக” (mimicking) இருப்பதால், நம்முடைய பழக்கங்கள் (நல்லவையோ கெட்டவையோ) நமக்குமட்டும் சொந்தமானவை இல்லை, நம் குடும்பத்தை, அதன்வழியாக ஒட்டுமொத்தச் சமூகத்தை நிரந்தரமாகப் பாதிக்கக்கூடியவை. அந்தக் கூடுதல் பொறுப்பு நமக்கு வரவேண்டும்.