இன்று அலுவலக மதிய உணவில் பாதாம் கீர் வைத்திருந்தார்கள், சுமாராக இருந்தது.
தமிழகச் சிறுநகரம் ஒன்றில் வளர்ந்த எங்களுக்குச் சிறுவயதில் ரோஸ் மில்க்கும் பாதாம் கீரும்தான் குளிர்பானங்கள். ‘கீர்’ என்றால் இந்தியில் பாயசம் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அதைத் தமிழ்ச்சொல்லாகவே ஏற்றுக்கொண்டு தமிழ் இலக்கணப்படி பாதாங்கீர் என்று சொல்லித் திரிந்தோம்.
ரோஸ் மில்க் அதிரடி வண்ணங்காட்டுவான் என்றால் பாதாங்கீர் சற்றுப் பதமான வெண்மைத் திரவம். குளிரவைக்கவேண்டியதுகூட இல்லை, எப்படி எடுத்துக் குடித்தாலும் இதமாக இருக்கும். நரநரவென்று ஏதோ தூள் தொடர்ந்து தட்டுப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால், அது பாதாம்தானா என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.
இந்தக் குளிர்பானங்களின் மூடியைத் திறக்கும் ‘ஓப்பனரை’க்கூட நாங்கள் வியந்து பார்ப்போம். அதைச் சரியான கோணத்தில் வைத்துத் திருப்பி பாட்டிலைத் திறந்து நீட்டுகிறவர்கள்தான் எங்களுக்குக் காரி, பாரி, ஓரி எல்லாம்.
ஆனால், ரோஸ் மில்க்கோ பாதாங்கீரோ எந்நேரத்திலும் கிடைக்காது, இரண்டு அல்லது மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு ஒருமுறைதான், அதுவும் அப்பா நல்ல மூடில் இருக்கும்போதுமட்டும்தான்.
அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவராக நினைத்துக்கொண்டு, ‘சரி, யாருக்கு ரோஸ் மில்க்? யாருக்கு பாதாங்கீர்?’ என்பார் நேரடியாக. மறுகணம் எங்கள் வாயெல்லாம் பல்லாகிவிடும். இரண்டே சாய்ஸ்தான். ஆனால், எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் திணறுவோம்.
உண்மையில் ரோஸ் மில்க்கா பாதாங்கீரா என்பது பெரும் தத்துவார்த்தக் கேள்வி. பல காரணிகளின் அடிப்படையில் சிந்தித்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும், அது தவறான தேர்வுதான் என்று அடுத்த சில நிமிடங்களில் தோன்றுவது கட்டாயம்.
ஆனால், அதற்குள் அப்பா எல்லாருக்கும் என்ன வேண்டும் என்று விசாரித்துக்கொண்டு கடைக்குக் கிளம்பியிருப்பார். அதற்குமேல் ஆர்டரை மாற்றமுடியாது. ரொம்ப ஆசையாக இருந்தால் வீட்டில் வேறு யாரிடமாவது ஒரு வாய் மாற்றிக் குடித்துக்கொள்ளவேண்டியதுதான்.
சிறிது நேரத்தில், ஒரு வயர் பை நிறைய பாட்டில்களுடன் அப்பா வருவார். பாட்டில்களும் சரி, அந்தப் பையும் சரி, அதற்குள் கிடக்கும் ஓப்பனரும் சரி, ஜில்லோ ஜில்லென்று இருக்கும். அவற்றைத் தொட்டுத் தொட்டு மகிழ்ந்து அனுபவித்தபிறகுதான் வயிற்றுக்கு ஈயப்படும்.
இன்றைக்குக் கடைகளில் கிடைப்பதுபோல் ‘Use and Throw’ பிளாஸ்டிக் பாட்டில்கள் அப்போது புழக்கத்தில் இல்லை. அதனால், வீட்டில் எல்லாரும் குடித்து முடித்தபின் காலிப் பாட்டில்களைப் பத்திரமாக உடையாமல் கடையில் கொண்டு சேர்க்கவேண்டும். அத்துடன் அந்தத் திருவிழா நிறைவுக்கு வரும். அடுத்த திருவிழா தொடங்கும்வரை அந்தத் தித்திப்பு நிலைத்தும் இருக்கும்.
1 Comment